மோசடி நபர்களிடம் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

Photo: Reuters

 

உலகம் முழுவதும் நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அதேசமயம், அந்த தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்களை திருடும் நபர்கள், அதைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருந்து பண எடுத்தல் போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன.

 

இதுபோன்ற மோசடி சம்பவங்கள் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளதாக தகவல் கூறுகின்றன. கடந்த 2020- ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்கள் மோசடி செய்பவர்களிடம் 200 மில்லியன் சிங்கப்பூர் டாலரை இழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், இந்த பண மோசடி செய்யும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்யும் பணியில் சிங்கப்பூர் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

மோசடி நபர்களிடம் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதை அறிய வேண்டிய நேரம் இது.

 

பின் (PIN) மற்றும் ஓடிபி (OTP) எண்ணை யாருக்கும் கொடுக்க வேண்டாம். DBS/POSB வங்கி ஊழியர்கள் அதை ஒருபோதும் உங்களிடம் கேட்க மாட்டார்கள்.

 

உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்கள் முதலில் +65 என்று தொடங்கியிருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது வெளிநாட்டிலிருந்து ஒரு மோசடி அழைப்பாக இருக்கலாம்.

 

அழைப்பு உண்மையானதா அல்லது மோசடி என்று உறுதியாக தெரியவில்லையா? சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 

மோசடி செய்பவர்கள் சமூக வலைத்தளங்களை ஹேக் செய்கிறார்கள் மற்றும் உங்கள் நண்பர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். அந்த மோசடி நபர்கள் மருத்துவ அவசர உதவி என்று கூறி பணம் கேட்கிறார்கள். போலி இணையதளங்கள் உங்கள் வங்கியின் உள்நுழைவு பக்கங்களைப் போல இருக்கும். உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் எண்ணுக்கு, இந்த லிங்கை கிளிக் செய்தால் பரிசு கிடைக்கும் என்று வரும் போலி இணையதளங்களை கிளிக் செய்வதை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும்.

 

எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி தொடர்பான விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். மோசடி நபர்களிடம் பணத்தை இழந்தாலோ, மோசடி நபர்கள் தொலைபேசியில் அழைத்தாலோ உடனடியாகக் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.