விரிவடையும் சிங்கப்பூரின் ரயில்வே கட்டமைப்பு! – தொற்றுப் பரவலினால் பணியில் தாமதம் ஏற்பட்டாலும் திட்டமிட்டபடி பணிகள் முடிக்கப்படும்!

(PHOTO: Railway Technology)

சிங்கப்பூரின் ரயில்வே கட்டமைப்பு பணிகள் பெருந்தொற்றுப் பரவலின் போது தாமதமடைந்தது.தற்போது ரயில் கட்டமைப்பு விரிவாக்கப் பணிகள் சரியான பாதையில் செல்வதாகப் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறியுள்ளார்.கோவிட்-19 பரவல் காரணமாக பணியில் தாமதம் ஏற்பட்டிருந்தாலும் அவை திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவடைந்துவிடும் என்று தெரிவித்தார்.

Singapore Rail Discovery Centre எனும் புதிய நிலையத்தைத் திறந்துவைத்து பின்னர் உரையாற்றிய போது அந்த உத்தரவாதத்தை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அளித்தார்.சிங்கப்பூர் ரயில்வே கட்டமைப்பு அடுத்த பத்து ஆண்டுகளில் 50 சதவீதம் விரிவடைய இருப்பதாக அவர் கூறினார்.

அந்தக் காலக்கட்டத்தில் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை, ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்குத் தீவு ரயில் பாதை போன்றவற்றின் கட்டமைப்புப் பணிகள் நிறைவடையும்.சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான RTS இணைப்புத் திட்டம் அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய ரயில் நிலையத்தில் சிங்கப்பூரின் 35 ஆண்டு ரயில் கட்டமைப்பைப் பற்றி எடுத்துக்காட்டும் முதல் நிரந்தரக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.மண்டாய் பராமரிப்புச் சேவை வளாகத்தில் அது நிறுவப்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பாராட்டும் வகையில் புதிய நிலையம் அமைந்துள்ளது.அடுத்த தலைமுறை ரயில் துறைப் பொறியியலாளர்களுக்கு ஊக்கமாகவும் அது விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.