ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான தயார்நிலை பட்டியலில் இடம்பிடித்த சிங்கப்பூர்..!

ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாட்டின் மின்னணு வணிகம் தொடர்பான குறியீட்டு எண்ணில் 152 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தில் வந்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதில் இந்த நாடுகளின் தயார்நிலை அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இப்பட்டியலில் நெதர்லாந்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அதை தொடர்ந்து சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும், பின்லாந்து (4), இங்கிலாந்து (5), டென்மார்க் (6), நார்வே (7), அயர்லாந்து (8), ஜெர்மனி (9), ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.

முதல் 10 இடங்களில் 8 இடங்களில் ஐரோப்பிய நாடுகளே இருக்கின்றன. இதில் சிங்கப்பூரும், ஆஸ்திரேலியாவும் மட்டுமே ஐரோப்பா சாராத நாடுகளாகும்.

மேற்கண்ட பட்டியலில் இந்தியா 73-வது இடத்தில் உள்ளது. இதன்படி நம் நாடு 7 இடங்கள் முன்னேறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஈரான் (42), கஜகஸ்தான் (57), அஜர்பைஜான் (62), வியட்நாம் (64), துனிசியா (70) ஆகிய நாடுகளுக்குப் பின்னால்தான் இந்தியா இருக்கிறது.

2017-ஆம் ஆண்டில் உலக அளவில் ஆன்லைன் வணிகத்தின் மொத்த மதிப்பு 3.9 லட்சம் கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டை விட அது 22 சதவீதம் அதிகமாகும்.

இதே காலத்தில் ஆன்லைனில் பொருள்கள் மற்றும் சேவைகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து 130 கோடியாக உயர்ந்துள்ளது. உலகில், 15 அல்லது அதற்கு அதிகமான வயது உடையவர்களின் மொத்த மக்கள்தொகையில் இது ஏறக்குறைய 25 சதவீதமாகும்.

உங்கள் அருகாமையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நம் சிங்கப்பூர் தமிழர்களுக்கு பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிரவும்.

WhatsApp  : wa.me/6588393569

Messenger : m.me/tamilmicsetsg