சிங்கப்பூர் எல்லையில் வரி செலுத்தாத சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்!

Photo: ICA

 

 

சிங்கப்பூர்- மலேசியா எல்லையில் அமைந்துள்ள உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிங்கப்பூர் சுங்கத்துறையின் அதிகாரிகள் மற்றும் ஐ.சி.ஏ. அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மலேசியா நாட்டு பதிவெண் கொண்ட இரண்டு லாரிகள் சோதனைச் சாவடியைக் கடக்க முயன்றது. அதனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் லாரிகளைத் தீவிரமாகச் சோதனையிட்டனர்.

 

அப்போது முதல் லாரியின் மேல்புறத்தில் பதுக்கி வரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கடத்திக் கொண்டு வரப்பட்ட 1,008 அட்டைப்பெட்டிகளையும், 1,010 சிகரெட் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல், இரண்டாவது லாரியின் மேல்புறத்தில் பதுக்கி வரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கடத்திக் கொண்டு வரப்பட்ட 980 அட்டைப்பெட்டிகளையும், 350 சிகரெட் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு லாரி ஓட்டுநர்களையும் அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் மலேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

இது போன்ற கடத்தல் சம்பவங்கள் காரணமாக, சிங்கப்பூரைச் சுற்றி உள்ள எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் ஐ.சி.ஏ. அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.