தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்திடம் பண மோசடி… சிங்கப்பூரில் இருந்து தஞ்சை வந்த நபரை தூக்கிய போலீஸ் – மேலும் சிலருக்கு வலைவீச்சு!

Singapore to trichy flight passengers covid update

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர், ட்ரேடான் இம்பேக்ஸ் என்ற நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்து வருகிறார்.

இந்நிலையில், அவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகார் மனுவில், சிங்கப்பூரில் உள்ள ஐஎன் டிராயல் இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தனது நிறுவனம் மூலம் அரிசி ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த நிறுவனத்தின் இயக்குநர் லிங்கேஷ் மற்றும் அவரது தாயார் கல்யாணி, தந்தை சிவகாந்தன் ஆகியோர் மொத்த விலையில் அரிசி மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டர் கொடுத்துள்ளனர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு 11 கண்டெய்னர்கள் மூலம் ரூபாய் 1.10 கோடி மதிப்பிலான 286 டன் அரிசி மூட்டைகளை சிங்கப்பூருக்கு செல்வக்குமார் அனுப்பியுள்ளார். ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரிசியை சிங்கப்பூருக்கு அனுப்பிய பிறகும், அதற்கு உண்டான பணத்தைத் தராமல் லிங்கேஷ் மோசடி செய்துள்ளார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Photo Credit: Sun News

புகாரைத் தொடர்ந்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு உறுதியானதால், மத்திய குற்றப்பிரிவு ஆவணத் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால், சிங்கப்பூர் நிறுவனத்தின் இயக்குநர்கள் தேடப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், லிங்கேஷ் தனது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு வந்திருப்பதாக, கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் (12/04/2022) அங்கு சென்றனர்.

பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவில் தங்கியிருந்த லிங்கேஷை, தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் மற்ற இயக்குநர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.