இப்படியும் சிலர் !- சிங்கப்பூரில் வரி ஏய்ப்பு செய்து மது விநியோகம் செய்த இருவருக்கு தண்டனை

Photo: Freepik

சிங்கப்பூருக்கு வரும் கப்பல்களுக்கு விநியோகிக்க இருந்த மதுவுக்கு வரியை செலுத்தாமல்,உள்நாட்டில் விற்கத் திட்டம் தீட்டியவர்களில் ஒரு நபருக்கு 28 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.சிங்கப்பூரில் நீண்டகாலமாக மிகப்பெரிய அளவில் கும்பலாக வரி ஏய்ப்பு செய்து மது விற்றதாகக் கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்செயல் இதுவாகும்.

வரி செலுத்தாத மது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விநியோகம் செய்யப்பட்டது.இதன்மூலம் மொத்தம் 25 மில்லியன் வரை வரி ஏய்ப்பு நடந்தது.சுங்கவரி,GST ஆகியவை இந்த வரி ஏய்ப்பு நிகழ்வில் அடங்கும்.வெளிநாட்டுக் கப்பலில் பணிபுரிவோருக்கு மரினா சவுத் துறைமுகம்,பெஞ்சூரு படகுத்துறையிலிருந்து சட்டவிரோதமாக உள்ளூரில் மது விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

சுங்கத்துறை சட்டத்தின் கீழ் $3,114,858.16 மதிப்பிலான சுங்கவரி,பொருள்சேவை வரி ஏய்ப்பு செய்ததன் தொடர்பில் இரண்டு குற்றங்களை,திட்டம் தீட்டிய இருவரில் ஒருவர் ஒப்புக்கொண்டார்.மேலும் 16 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.

வரி ஏய்ப்பு செய்த தொகையை விட அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகை 9 மடங்கு அதிகமாகும்.திட்டம் தீட்டிய மற்றொரு நபருக்கு முன்னதாக ஓராண்டு சிறைத்தண்டனையும் சுமார் $48 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.