சிங்கப்பூர் கோவிலில் திருட்டு சம்பவம்.. ஊழியர் மீது எழுந்த குற்றச்சாட்டு

சிங்கப்பூர்
Unsplash

சிங்கப்பூர் தெம்பனிஸில் உள்ள கோவிலில் சுமார் S$150,000 வெள்ளியை திருடியதாக ஊழியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோவில் ஊழியரான அவர், பக்தர்கள் நன்கொடையாக அளித்த பணத்தில் இருந்து சுமார் S$150,000 வெள்ளியை பயன்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது.

58 வயதான கோ பீ என்ற அந்த ஊழியர் மீது நம்பிக்கை மீறல் தொடர்பாக இரு குற்றச்சாட்டுகள் இன்று (ஏப்ரல் 3) நீதிமன்றத்துக்கு வந்தது.

குற்றம் நடந்த நேரத்தில், தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 21 இல் அமைந்துள்ள தெம்பனீஸ் சீனக் கோயிலில் அவர் நிர்வாக எழுத்தராக பணிபுரிந்துள்ளார்.

முதலில், 2018 செப்டம்பர் மற்றும் டிசம்பருக்கு இடையில், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சுமார் S$28,000 ரொக்க நன்கொடைகளை கோ தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

பிறகு, 2019 ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் S$123,006 வெள்ளி ரொக்கத்தை கோ நன்கொடையாகப் பெற்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

மொத்தத்தில், பக்தர்களிடமிருந்து மட்டும் சுமார் S$151,006 வெள்ளியை அவர் நன்கொடையாகப் பெற்று கையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது வழக்கு வரும் மே 2ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

நம்பிக்கை மீறல் செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.