சிங்கப்பூர்- திருச்சி இடையே சிறப்பு விமானத்தை இயக்கிய ‘ஏர் ஏசியா’!

Photo: Trichy Aviation Official Twitter Page

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிங்கப்பூர் அரசின் சிறப்பு பயண பாதைத் திட்டத்தின் கீழ் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான பயணிகள் விமான சேவை வரும் நவம்பர் 29- ஆம் தேதி தொடங்குகிறது.

சிங்கப்பூரில் மேலும் 1,670 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்த திட்டத்தின் படி, இந்தியாவில் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை மற்றும் டெல்லி ஆகிய மூன்று நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி ஆறு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விமான பயண அட்டவணை தொடர்பான அறிவிப்பை விமான நிறுவனங்கள் வெளியிடவில்லை.

இந்தியாவில் இருந்து வரும் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கு VTL பயண அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் சிங்கப்பூர் நேரப்படி இன்று (22/11/2021) மாலை 06.00 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்ல VTL பயண அனுமதிக்கான விண்ணப்பங்கள் எப்போது?

இந்த நிலையில், திருச்சி, சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் நிலையில், கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில், திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவையை வழங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முன் வர வேண்டும் என்று திருச்சி ஏவியேஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வரும் ‘ஏர் ஏசியா’ (Air Asia) விமான நிறுவனம், நேற்று (21/11/2021) சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 178 பயணிகளுடன் சிறப்பு விமானத்தை இயக்கியது. சுமார் 600 நாட்கள் காத்திருப்புக்கு பின் ‘ஏர் ஏசியா’ விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை திருச்சி ஏவியேஷன் (Trichy Aviation) மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையம் (Tiruchirappalli International Airport) ஆகிய இரண்டு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.