பிரம்மிக்க வைக்கும் சிங்கப்பூர் – சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வழங்கும் சிங்கப்பூர்

indian-tourist-arrivals-surge-singapore
(PHOTO: Singapore Tourism Board)

சிங்கப்பூர் பயணத்துறை கழகம் ,இந்தாண்டு சிங்கப்பூருக்கு நான்கு முதல் ஆறு மில்லியன் வரையிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.இந்தாண்டின் முற்பகுதியில் 1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்தனர்.கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 12 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

மலேசியா,இந்தியா,இந்தோனேசியா,பிலிப்பின்ஸ்,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் சிங்கப்பூருக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர்.மொத்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் இந்த நாடுகளிலிருந்து வந்தவர்கள் பாதிக்குமேல் பங்கு வகித்தனர். அதிலும், மலேசியா, இந்தியா,இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து இங்கு அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

சிங்கப்பூருக்கு வந்து சுற்றுலாப்பயணிகள் தங்கிய சராசரி காலமும் அதிகரித்துள்ளது.கிட்டத்தட்ட 7.1 நாள்கள் அவர்கள் தங்கியிருந்தனர்.ஏறத்தாழ $1.3 பில்லியன் வரை இங்கு செலவு செய்துள்ளனர்.முன்பிருந்த தொகையை விட இது இரு மடங்கு அதிகமாகும்.உலகளாவிய அரசியல்,சுகாதார நிலை,பொருளாதார நிலவரம் மாறிக்கொண்டே வருவதால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் சில சவால்கள் எதிர்நோக்கப்படுவதாக கழகம் கூறியது.

சிங்கப்பூரில் உள்ள பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக அமைப்பு போன்றவை சுற்றுலாப் பயணிகளிடையே தொடர்ந்து பிரபலமாக இருப்பதைக் காட்டுகிறது.சிங்கப்பூரில் இடம்பெறும் முக்கிய நிகழ்சிகளும்,சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் சிறப்பம்சங்களும் அவர்களைத் தொடர்ந்து ஈர்க்கும் என்று நம்பிக்கை இருப்பதாக பயணத்துறை தெரிவித்தது.