‘சிங்கப்பூரில் ஓட்டுநர்களுக்கு நிவாரணத் தொகை’- விண்ணப்பிப்பது எப்படி?

Photo: TODAY

 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும்தங்கள் நாடுகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, கொரோனா தடுப்பூசியை முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செலுத்தும் பணியை முடுக்கிவிட்டனர். இதன் பயனமாக இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் படிப்படியான தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

 

இந்த நிலையில் முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூரில் தேசிய வர்த்தக யூனியன் காங்கிரஸுடன் (National Trades Union Congress- ‘NTUC’) இணைந்த சங்கங்களில் உறுப்பினராக இருக்கும் காம்பி பேருந்து ஓட்டுநர்கள் (Combi Bus Drivers) மற்றும் விநியோகச் சேவை வழங்கும் ஓட்டுநர்கள் (Delivery Drivers), ரைடர்ஸ் (Riders) ஆகியோருக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையானது தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கம் (National Private Hire Vehicles Association- ‘NPHVA’)- தேசிய டெலிவரி சாம்பியன்ஸ் அசோசியேஷன் (National Delivery Champions Association- ‘NDCA’) உறுப்பினர்களுக்கு சுமார் 4.28 மில்லியன் சிங்கப்பூர் டாலர் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் 13,000 ஓட்டுநர்கள் மற்றும் ரைடர்ஸ்கள் பயனடைவர்.

 

இந்த தொகையைப் பெற லிமோசின் கார் ஓட்டுநர்களுக்கும் (Limousine Drivers), 13 பேர் வரை அமரும் வசதிக் கொண்ட காம்பி பேருந்து ஓட்டுநர்களுக்கும் (Combi Bus Drivers) வழங்கப்படுகிறது. தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கத்தில் சந்தா செலுத்தி வரும் உறுப்பினராக இருக்க வேண்டும். பெட்ரோலில் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்தி வர வேண்டும்.

 

கொரோனா டிரைவர் நிவாரணத் தொகையைப் பெறுபவர்களாக இருக்கக் கூடாது. வர்த்தக வருமானத்திற்கான சான்று, வாகன வகையின் சான்று மற்றும் வேலை செயல்பாட்டின் சான்று, சுய தொழில் சான்று போன்ற ஆவணங்களை அவர்கள் வழங்க வேண்டும். இந்த நிவாரணத் தொகையைப் பெற தகுதி உள்ளவர்கள் http://ufse.org.sg/Pages/reliefscheme.aspx என்ற இணையதளத்தில் ஜூன் 21- ஆம் தேதி முதல் ஜுலை 16- ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

இந்த நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை என்.டி.யூ.சி.யின் ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுய தொழில் நிர்வகிக்கும் (NTUC’s Freelancers and Self- Employed Unit) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்களுக்கு நான்கு முதல் ஆறு வாரங்களில் விண்ணப்பத்தின் முடிவு குறித்து தெரிவிக்கப்படும். விண்ணப்பத்தாரர்களுக்கு ஒப்புதல் கிடைத்தால் அவர்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

 

காம்பி பேருந்து ஓட்டுநர்களுக்கும், லிமோசின் ஓட்டுநர்களுக்கும் தலா 650 சிங்கப்பூர் டாலரும், பெட்ரோல் அல்லது ஹைப்ரிட் வாகனங்களைப் பயன்படுத்தும் விநியோகச் சேவை வழங்கும் ஓட்டுநர்களுக்கு தலா 400 சிங்கப்பூர் டாலரும், மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தும் டெலிவரி ரைடர்ஸ் ஒவ்வொருவருக்கும் தலா 250 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படுகிறது.

 

இந்த ஆண்டு மார்ச் 1- ஆம் தேதிக்கு பிறகு சங்கத்தில் இணைந்த காம்பி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் லிமோசின் ஓட்டுநர்களுக்கு தலா 600 சிங்கப்பூர் டாலரும், விநியோகச் சேவை வழங்கும் ஓட்டுநர்களுக்கு 350 சிங்கப்பூர் டாலரும், விநியோகச் சேவை வழங்கும் ரைடர்ஸ்களுக்கு 200 சிங்கப்பூர் டாலரும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.