அடுத்த மாதம் சிங்கப்பூர் சாலைகளில் மின்சாரப் பேருந்தைப் பார்க்கலாம்! – சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் முதல் மின்சாரப் பேருந்து!

electric bus volvo bzl

அதிகளவு கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும்,எரிவாயுப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.சிங்கப்பூரில் மின்கலங்களால் இயங்கக்கூடிய மின்சாரப் பேருந்து தயாரிக்கப் பட்டுள்ளது.

இந்த மின்சாரப் பேருந்துகளை பொதுப் போக்குவரத்துச் சேவையில் இயக்க சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்தைச் சாதகமாக்கிக் கொள்ளும் முனைப்பில் உள்ளூர் நிறுவனங்கள் மின்சாரப் பேருந்து தயாரிப்பில் இறங்க திட்டமிடுகின்றன.

Volvo BZL -SC Newstar City என்ற மூன்று கதவுகளைக் கொண்ட மின்சாரப் பேருந்து நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.சுவீடனின் வாகன வர்த்தக உற்பத்தி நிறுவனம் வொல்வோவுக்கும் உள்ளூர் நிறுவனமான SC ஆட்டோவுக்கும் இடையேயான ஓராண்டு ஒத்துழைப்புக்குப் பின்னர் இது சாத்தியமானது.சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் முதல் மின்சாரப் பேருந்து என்ற பெருமை இதற்குரியதாகும்.

உள்ளூர் பேருந்துகளின் தரநிலைக்கு ஏற்றார்போல இந்த மின்சாரப் பேருந்து தயாரிக்கப் பட்டுள்ளது.அடுத்த மாத இறுதிக்குள் உள்ளூர் சாலைகளில் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.மின்சாரப் பேருந்தின் மின்கலங்கள் உட்பட 90 சதவீதப் பாகங்கள் மறுசுழற்சி செய்யக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.