சொந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ள சிங்கப்பூர் இளைஞர்! – தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க முயல்வதாக பேச்சு…

சிங்கப்பூரில் சொந்தத் தொழிலைத் தொடங்கி இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார். கிடைத்துள்ள தகவலின்படி, இந்த இளைஞர் உட்லாண்ட்ஸ் தொழிற்பேட்டையில் பழைய பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.

உட்லாண்ட்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள Gaia Guni சந்தையில் 15 கடைகள் உள்ளன. பொதுவிடுமுறை நாட்களிலும் கடைகள் திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அழிந்து வரும் காராங் கோணி (Karang Guni) தொழிலை மீட்க வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய உத்திகளைப் பயன்படுத்தி நாளுக்குநாள் முடிவை நோக்கி பயணிக்கும் காராங் கோணி தொழிலை எடுத்து நடத்த வேண்டும் என்று கடை உரிமையாளரான ஒரு இளைஞர் தெரிவித்துள்ளார்.

அவர் கூற்றுப்படி, முகநூல், இன்ஸ்டாகிராம் மூலமாக பழைய பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க வேண்டும். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அவரது தந்தைக்கு உதவ காராங் கோணி தொழிலுக்கு அவர் வந்துள்ளார்.

இத்தொழிலுக்கு தன்னால் முடிந்தவரை புத்துயிர் அளிக்க முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, இந்த தொழிலை நடத்தி வருபவர்கள் முதுமை காரணமாக விலகி வருவதோடு மட்டுமில்லாமல், இளைஞர்கள் பெரும்பாலும் இத்தொழிலுக்கு வர விரும்புவதில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் இத்தொழில் நீடிக்கும் என அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.