சிங்கப்பூர்: இளைஞர்களை குறிவைத்து நடத்தப்படும் மோசடிகள்!! எப்படி தவிர்ப்பது?

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பதிவாகியுள்ள ஆன்லைன் மோசடிச் சம்பவங்களில் இளைஞர்களே அதிகம் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 20 முதல் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 53.5 சதவீத மோசடிச் சம்பவங்களில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் குறிப்பாக வேலைவாய்ப்பு தொடர்பாக முயற்சி செய்து பின்னர் மோசடிக்கு ஆளானவர்களே அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தொடக்கத்தில் கருத்தாய்வில் பங்கேற்றால் பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர், அவ்வாறு கூறியது போலவே, பணம் கிடைத்துள்ளது. இதுபோன்ற வேலை விளம்பரத்தைப் பார்த்த ஒரு பெண், விளையாட்டாக விளம்பரத்திற்கு பதிலளித்துள்ளார்.அதன்பிறகு, வெளிநாட்டுத் தொலைபேசி எண்ணுடன் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தைச் சேர்ந்தவர் என்றுகூறி ஒருவர் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தொலைபேசியில் அந்த நபர் கூறியதாவது, கருத்தாய்வில் பங்கேற்றால் 6 வெள்ளி கிடைக்கும் என்பதாகும். அவ்வாறே பெண்ணுக்கு பணமும் கிடைத்துள்ளது. பின்னர் இன்னொரு கருத்தாய்வில் பங்கேற்றால் 12 வெள்ளி கிடைக்கும் என்று கூறி ஆசை வார்த்தைகளால் அவர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த அந்தப் பெண், தொலைபேசி எண்ணை ப்ளாக் செய்துள்ளார்.

இதுபோல, இளைஞர்கள் அதிகம் ஏமாறும் மோசடிகளில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடியும் அடங்கும். Carousell, Facebook, Shopee உள்ளிட்ட தளங்களில் பணம் செலுத்திப் பொருள் வாங்கப்படும். ஆனால் பொருள் விநியோகிக்கப்படாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற மோசடி விளம்பரங்கள், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளில் இருந்து தப்பிக்க அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலியான ScamShield பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்கப் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.