இந்த திட்டம் நல்லா இருக்கே! -சிங்கப்பூரில் அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க வழங்கப்படும் உதவித்தொகை உயர்வு

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online

சிங்கப்பூரில் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி முதல் காம்கேர் உதவித் தொகை அதிகரிக்கப் படும் என்று துணை பிரதமர் லாரன்ஸ் ஒங் அறிவித்தார்.உலகளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் குடும்பங்களும் வர்த்தகங்களும் எதிர்கொள்ளும் பொருளியல் சவால்களைச் சமாளிக்க உதவும் வகையில் உதவித் தொகை அதிகரிக்கப் படுகிறது.

காம்கேர் நீண்டகால உதவித் திட்டத்தில் பங்குபெறும் ஒருவரை மட்டும் கொண்ட குடும்பம் அதிகபட்சமாக $649 உதவித் தொகையை பெறும்.குறுகிய காலம் முதல் நடுத்தர காலம் வரையிலான திட்டங்களுக்கும் இது பொருந்தும்.தற்போது ரொக்க உதவித் தொகை $ 600 ஆக உள்ளது.

இந்த திட்டத்தில் பங்குபெறும் நபர்களுக்கு ரொக்க உதவித் தொகையை அதிகரிப்பதன் மூலம் காம்கேர் நீண்டகால உதவித் திட்டத்தில் இடம்பெறும் 4000-க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் குடும்பங்கள் பலனடையும் என்று சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தில் இடம்பெறும் பெரும்பாலான குடும்பங்களில் ஓரளவு வருமானம் அல்லது வருமானம் ,குடும்ப ஆதரவோ இல்லாத மூத்தோர் இருப்பார்கள்.குடும்பத்தில் உள்ளோர்,வருமானம்,மற்றும் அவர்களின் தேவை ஆகியவற்றைப் பொருத்து உதவித் தொகை மாறும்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் ,உலக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் போன்றவற்றால் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினங்களை சமாளிக்க கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தற்காலிக உதவி நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவற்றில் மேம்பாடுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

இது தவிர்த்து ஜிஎஸ்டி ரொக்கப் பற்றுச் சீட்டைப் பெறுவோர் ஆகஸ்ட் மாதம் $300 வரை கூடுதல் தொகை பெறுவர்.இதன் மூலம் 1.5 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயனடைவர்.