பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சந்தாவில் தள்ளுபடி- சிங்டெல் நிறுவனம் அறிவிப்பு!

File Photo: AFP

 

சிங்கப்பூரில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே பணிப்புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (08/06/2021) சிங்டெல் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் (Singtel Broadband Service) இடையூறு ஏற்பட்டதால், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களது பணியைத் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

 

அதைத் தொடர்ந்து, சிங்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் நாள் முழுவதும் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ஏற்பட்ட இடையூறால் வீட்டிலிருந்து வேலை செய்வதில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்கள் (Social Media) மூலம் புகார் தெரிவித்தனர்.

 

இதையடுத்து, நேற்று (08/06/2021) மாலை 06.15 மணி நிலவரப்படி, ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ஏற்பட்ட கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டது. இதனை சிங்டெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

அதேபோல், மத்திய மற்றும் கிழக்கு சிங்கப்பூரில் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் ஏற்பட்ட இடையூறுக்கான காரணம் குறித்து தங்கள் நிறுவனத்தின் பொறியாளர்கள் விசாரித்து வருவதாக டெல்கோ நிறுவனம் கூறியுள்ளது.

 

“சேவையில் இடையூறு ஏற்பட்டதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். ஃபைபர் பிராட்பேண்ட் சேவையில் இதுப் போன்று மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதத்திற்கான சந்தாவில் இருந்து 10% தள்ளுபடி வழங்கப்படும். இது வாடிக்கையாளர்களின் ஜுலை மாத சந்தாவில் பிரதிபலிக்கும்.

 

பாதிக்கப்பட்ட பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களில் சிங்டெல் போஸ்ட்பெய்டு (Postpaid Mobile Customers) வாடிக்கையாளர்கள் மற்றும் டெல்கோவிடம் இருந்து எஸ்எம்எஸ் (Telco SMS) பெற்றவர்கள் தங்கள் உள்ளூர் மொபைல் டேட்டா கட்டணங்களையும் (Mobile Data Charges) அந்த நாளில் தள்ளுபடி செய்யப்படும்” என்று சிங்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சிங்கப்பூரில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமாக சிங்கப்பூர் டெலிகம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (Singtel) நிறுவனம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.