மகனை முகத்தில் குத்திய தந்தைக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை!

File Photo Via The Singapore Police Force

 

தனது இளம் வயதான மகனை முகத்தில் குத்திய தந்தைக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

48 வயதான நபர் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் (Singapore Changi Airport) பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 3- ஆம் தேதி அன்று இரவு 09.00 மணியளவில் நான்கு கேன் பீர் குடித்துவிட்டு, தனது குடும்பத்தின் பிளாட்டுக்கு திரும்பினார். அப்போது, 74 வயதான அவரது தாயார் அவருக்கு எதிராக தனிப்பட்ட பாதுகாப்பு ஆணையை எடுத்ததால், இங்கு வரக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மகனுக்கும், தாயாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அவருடைய தாயார் அவரை வெளியேறச் சொன்னார். அப்போது அந்த நபர் தனது தாயாரைக் கடுமையான வார்த்தையால் திட்டினார்.

 

தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர், அந்த நபரை கைது செய்த போதும், அந்த நபர் தனது தாயாரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.

 

அதேபோல், இந்தாண்டு பிப்ரவரி 25- ஆம் தேதி மாலை 04.30 மணியளவில், அந்த நபர் தனது குடும்பத்தின் பிளாட்டுக்கு சென்று தாய் மற்றும் அவரது 51 வயது சகோதரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தனது 12 வயதுடைய இளைய மகனிடம் தன்னுடன் பிளாட்டில் இருந்து வெளியேற விரும்புகிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவரது மகன் தான் பிளாட்டில் இருந்து வெளியேற விரும்பவில்லை. பாட்டியுடன் இங்கேயே இருப்பதாகக் கூறியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது சகோதரியின் முடியை இழுத்துள்ளார். மேலும், தனக்கு எதிராக ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு ஆணையை (Personal Protection Order- ‘PPO’). வைத்திருந்த தனது தாயாரைத் தள்ளுவதற்கு முன்பு, தனது மகனைத் தள்ளி முகத்தில் குத்தியுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அன்று மாலை 06.30 மணிக்கு கைது செய்தனர்.

 

இது தொடர்பான வழக்கு நேற்று (01/07/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த நபர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. தாமாக முன்வந்து காயப்படுத்துதல், துன்புறுத்துதல், மீறுதல் ஆகிய குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அந்த நபருக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.