ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு பால் குடம் சுமந்து வந்த சிங்கப்பூர் துணை பிரதமர்!

Photo: Singapore Deputy Prime Minister Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் பிரசித்திப் பெற்றது டேங்க் ரோட்டில் (Tank Road) உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் (Sri Thendayuthapani Temple). இந்த கோயிலுக்கு சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளும், இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

“சிங்கப்பூர் உலகின் முதலிடம்” – 2022ஆம் ஆண்டில் அதிகமாக இன்ஸ்டாகிராம் செய்யப்பட்ட இடமாக தேர்வு!

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழா (Thaipusam Festival) புகழ் பெற்றது. அந்த வகையில், இன்று (18/01/2022) தைப்பூசத் திருவிழா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடனும், கட்டுப்பாடுகளுடனும் நடைபெற்றது. கோயில் இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல்; முகக்கவசம் அணிதல்; தரிசனம் முடிந்தவுடன் கோயில் வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நேற்று (17/01/2022) நள்ளிரவு முதல் வரத் தொடங்கிய பக்தர்கள் பால் குடம் ஏந்தி தங்களது நேர்த்திக் கடனை முருகனுக்கு செலுத்தினர். பால் குடம் செலுத்த பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானப் பொட்டலங்களும் வழங்கப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் விமானங்களில் 6,00,000 பேர் பயணம்!

இந்த நிலையில், தைப்பூசத்தையொட்டி, இன்று (18/01/2022) காலை சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் சுவீ கியட் (Singapore Deputy Prime Minister Heng Swee Keat), பால் குடம் சுமந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு வருகை தந்தார். பின்னர், பாலை முருகனுக்கு செலுத்தினார். கோயிலுக்கு வருகை தந்த துணை பிரதமருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பொன்னாடைப் போர்த்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்களிடம் பேசிய துணை பிரதமர், சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். பின்னர், அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.