வங்கி கொள்ளை- கனடா நாட்டவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பெண்ணை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு பணிப்பெண் - கடும் கோபத்தில் செய்த கொடூர செயல்
(Photo: TODAY)

 

கனடா நாட்டைச் சேர்ந்தவர் டேவிட் ஜேம்ஸ் ரோச் (David James Roach). இவருக்கு வயது 31. இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29- ஆம் தேதி அன்று சுற்றுலாவுக்காக சிங்கப்பூருக்கு வந்தார். இந்நிலையில் கடந்த 2016- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7- ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள ஹாலந்து வில்லேஜில் (Holland Village’s) இயங்கி வரும் ‘Standard Chartered’ வங்கி கிளைக்குள் நுழைந்த வங்கி ஊழியர்களை மிரட்டி டேவிட் ஜேம்ஸ் ரோச் 30,450 சிங்கப்பூர் டாலரை கொள்ளையடித்து சென்றார்.

 

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டது டேவிட் ஜேம்ஸ் ரோச் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது ஊழல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து, அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது, டேவிட் ஜேம்ஸ் ரோச் தாய்லாந்து நாட்டிற்கு தப்பித்துச் சென்றதைக் கண்டுபிடித்தனர். சிங்கப்பூர் அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், தாய்லாந்து காவல்துறையினர் முக்கிய இடங்களில் டேவிட் ஜேம்ஸ் ரோச்சைத் தேடி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பேக்பேக்கர்ஸ் ஹாஸ்டலில் (Backpackers’ Hostel) இருந்த அவரை அதிரடியாக கைது செய்தனர். தாய்லாந்திற்கு பெரும் தொகையைக் கடத்தியதற்காக டேவிட் ஜேம்ஸ் ரோச் 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

டேவிட் ஜேம்ஸ் ரோச்சை எங்களிடம் ஒப்படைக்குமாறு தாய்லாந்து அதிகாரிகளிடம், சிங்கப்பூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சிங்கப்பூர் அதிகாரிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து, சிறையில் இருந்து விடுதலையான டேவிட் ஜேம்ஸ் ரோச், கடந்த 2018- ஆம் ஆண்டு ஜனவரி 11- ஆம் தேதி லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவரை பிரிட்டிஷ் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

பின்னர், கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இங்கிலாந்தின் வெளியுறவுத்துறைச் செயலாளர், டேவிட் ஜேம்ஸ் ரோச்சை சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து, டேவிட் ஜேம்ஸ் ரோச் இங்கிலாந்து நாட்டின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் டேவிட் ஜேம்ஸ் ரோச் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்டார்.

 

இந்த நிலையில், ‘Standard Chartered Bank’ வங்கி கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று (07/07/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டேவிட் ஜேம்ஸ் ரோச் வங்கியில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து நீதிபதி, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படி தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

உடல் ரீதியான தண்டனை குறித்து இங்கிலாந்திற்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அளித்த உத்தரவாதம் காரணமாக டேவிட் ஜேம்ஸ் ரோச்சுக்கு பிரம்படி தண்டனை நிறைவேற்றப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.