சிங்கப்பூரில் விபத்தில் சிக்கி காலை இழந்த தமிழக ஊழியர்: “நம்ம ஊழியருக்கு நாம தான் உதவனும்” – முழு ரிப்போர்ட்

migrant-worker-leg-amputated
ItsRainingRaincoats/FB

சிங்கப்பூரில் 24 வயதான வெளிநாட்டு ஊழியர் கடந்த ஆண்டு டிசம்பர் 3, அன்று ஏற்பட்ட வேலையிட விபத்தில் சிக்கியதால், அவரது கால் துண்டிக்கப்பட்டது.

தமிழ்நாட்டு ஊழியரான வினோத், சிங்கப்பூருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வந்தார். தற்போது அவரின் மருத்துவமனை மற்றும் இயல்பான வாழ்க்கைக்கு மீட்டெடுக்கும் மறுவாழ்வுக் கட்டணம் சுமார் S$150,000 என கூறப்பட்டுள்ளது.

விமானம் ரத்து: Scoot, SIA விமானங்களை சாடிய வெளிநாட்டவர் – ஒழுங்கீனமில்லை என காட்டம்

அவரது சக ஊழியர்கள் கட்டணங்களை செலுத்த அவர்களால் முடிந்த அளவு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் அவர் தொடர்ந்து வேலை செய்ய செயற்கை காலுக்கு நிதியளிக்கவும் முயற்சித்து வருகின்றனர்.

என்ன நடந்தது?

வினோத்தும் அவரது குழுவினரும் லாரியில் இருந்து ஐந்து ஸ்டீல் தகடுகளை இறக்கும் பணியில் ஈட்டுபட்டனர். அதில் அவர்கள் ஐந்தாவது தட்டை இறக்கிக்கொண்டிருந்தபோது, ​​​​ஆபரேட்டரால் அந்த தட்டைச் சரியாகக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், துரதிர்ஷ்டவசமாக இரும்புத் தகடு வினோத்தின் காலில் விழுந்தது.

அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், காயமடைந்த அவரது காலில் தொற்று ஏற்பட்டு, தொற்று மேல்நோக்கி பரவத் தொடங்கியது. இதனால், அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அவரது காலை துண்டிக்க முடிவு செய்தனர்.

மருத்துவ கட்டணம் S$150,000

இந்நிலையில், வினோத்தின் மருத்துவமனை கட்டணம் S$114,000ஐ எட்டியுள்ளது, மேலும் மறுவாழ்வு நிலையத்தில் அவருக்கு தேவையான சிகிச்சைக்கு நிதியளிக்க மற்றொரு S$50,000 தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு இழப்பீடாகப் அவர் S$45,000 பெறலாம் என Give Asia என்று கூறியது, ஆனால் அது காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்றும் கூறியுள்ளது.

வினோத்தின் சக ஊழியர் ஒருவர் நிதி திரட்டும் பக்கத்தை அமைப்பதற்காக Give Asiaவை அணுக உதவினார். அதில் சுமார் S$60,000க்கு மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. திரட்டப்பட்ட பணம் நேரடியாக மருத்துவமனைக்குச் செல்லும் என கூறப்படுகிறது.

நிறுவனம் என்ன சொல்கிறது?

வினோத்திற்கு உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும், மேலும் அவருக்கு செயற்கை கால் பொருத்துவதற்கு உதவுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் வினோத்தின் நிறுவனம் கூறியது.

வினோத் தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யவும், கஷ்டத்தில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு உதவும் நோக்கிலும் நிறுவனம் அவருக்கு சிறிய வேலைகளை மட்டும் வழங்கும் என்றும் கூறியுள்ளது.

மீளாத துயரம்

தமிழ்நாட்டில் உள்ள வினோத்தின் தந்தை நீரிழிவு நோயுடன் போராடி வருவதால், குடும்பத்தை நடத்துவதற்காக அவரது தாயார் வயலில் தற்காலிகப் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது, மேலும் வினோத்தின் குடும்பம் வாழ்வாதாரத்தில் சிக்கலில் இருப்பதாகவும் ItsRainingRaincoats அமைப்பு பகிர்ந்து கொண்டது.

வினோத் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகும் இன்னமும் அவர் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் இருந்து மீளவில்லை, ஆனாலும் கூட தன்னார்வத் தொண்டர்கள் அவரைச் சந்தித்தபோது கேமராவைப் பார்த்து புன்னகித்தார்.

சிங்கப்பூரில் ஒரே வீட்டில், வேறு வேறு குடும்பத்தைச் சார்ந்த நபர்கள் வாடகைக்கு இருக்கலாமா?