அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

 

இன்று (03/07/2021) காலை 09.40 மணியளவில் சிங்கப்பூரில் உள்ள பிளாக் 395 டம்பைன்ஸ் அவென்யூ 7-ல் (Block 395 Tampines Avenue 7) அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கும் (Singapore Civil Defence Force- ‘SCDF’), காவல்துறையினரினருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் தீயணைப்பு வாகனங்களுடன் தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு விரைந்தனர். மேலும், காவல்துறையினரும் அங்கு விரைந்தனர்.

 

பின்னர், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவி செட்டை (Breathing Apparatus Sets) அணிந்துக் கொண்டு தீ விபத்து ஏற்பட்ட 10- வது மாடியில் உள்ள ஒரு வீட்டின் அறைக்குள் நுழைந்தனர். அந்த அறையில் வெளியேற முடியாமல் தவித்தக் குடியிருப்பாளரை ஜன்னல் வழியாகப் பாதுகாப்பாக மீட்டனர். அதைத் தொடர்ந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இருப்பினும் அறையில் இருந்த மொத்த பொருட்களும் எரிந்து நாசமானது.

 

இதனிடையே, தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் 9 முதல் 12- வது மாடி வரையிலான 40 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். இதில் 11- வது மாடியில் ஒரு குடியிருப்பாளர் வெளியேற்றத்தின் போது விழுந்துள்ளார். இதையடுத்து, அவர் உடனடியாக செங்காங் பொது மருத்துவமனைக்கு (Sengkang General Hospital) ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.

 

அதேபோல், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட யூனிட் குடியிருப்பாளருக்கு (Unit Occupant) துணை மருத்துவர் சிகிச்சை அளித்தார். இதனால் உடல்நலம் தேரிய நிலையில், அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

 

இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.