கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!

Photo: Tampines Rovers Football Club Official Facebook Page

 

அண்மையில் உஸ்பெகிஸ்தானின் (Uzbekistan) தாஷ்கெண்டிற்குச் சென்ற (Tashkent) தெம்பனிஸ் ரோவர்ஸ் கால்பந்து அணியின் (Tampines Rovers Football Club) விளையாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெம்பனிஸ் ரோவர்ஸ் கால்பந்து கிளப் நிர்வாகம் இன்று (15/07/2021) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

‘ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்’ (AFC Champions League) கால்பந்து போட்டி உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கெண்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தெம்பனிஸ் ரோவர்ஸ் (Tampines Rovers) கால்பந்து அணியின் வீரர்கள் தாஷ்கெண்டிற்கு விமானம் மூலம் சென்றனர். பின்னர் போட்டியை முடித்து கொண்டு சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு (Changi International Airport) வந்த தெம்பனிஸ் ரோவர்ஸ் கால்பந்து அணியின் வீரர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அணியில் இடம் பெற்றிருந்த ஒரு விளையாட்டு வீரருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது. இருப்பினும், தொற்று உறுதியான வீரருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், அவர் கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்த அணியில் இடம்பெற்றிருந்த மற்ற வீரர்களும் இரண்டு வார தனிமையில் இருக்க சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

இதனிடையே, சிங்கப்பூர் திரும்பும் வழியில் துபாயிக்கு சென்ற கால்பந்து அணியின் வீரர்கள், அங்கு மற்றொரு விமானத்திற்காக சுமார் ஒன்பது மணி நேரம் காத்திருந்ததாகவும், தொற்று உறுதியான விளையாட்டு வீரர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

தெம்பனிஸ் ரோவர்ஸ் கால்பந்து கிளப் நிர்வாகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணம் மேற்கொண்ட கால்பந்து அணியின் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றினர். ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்னதாக அணியின் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நெறிமுறைகளின்படி மற்ற விளையாட்டு வீரர்கள் ஹோட்டல்களில் இரண்டு வாரங்களுக்கு தனிமையில் இருப்பார்கள். சிங்கப்பூர் கால்பந்து சங்கம் (Football Association of Singapore- ‘FAS’) மற்றும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் (Ministry of Health, Singapore) ஆகியவை எங்களுக்கு வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளது.