டாக்சி ஓட்டுநரைத் தாக்கிய நபருக்கு இரண்டு வார சிறைத்தண்டனை!

File Photo Via The Singapore Police Force

 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2- ஆம் தேதி அன்று காலை விநியோக ஊழியரான வினோத் ராஜ் (வயது 31) தனது காதலியுடன் டாக்சி ஒன்றில் பயணம் மேற்கொண்டார். அப்போது, அம்பர் குளோரி ஹோட்டலுக்கு (Amber Glory Hotel) செல்லுமாறு டாக்சி ஓட்டுநரிடம் வினோத் ராஜ் கூறியுள்ளார். அதற்கு ஓட்டுநர், அதன் இருப்பிடம் தனக்கு தெரியாது என்று கூறியவர், அல்ஜூனிட்டை அடைந்ததும் தனக்கு வழிகாட்டும் படி வினோத் ராஜைக் கேட்டுக்கொண்டார்.

 

இருப்பினும் அவர்கள் டாக்சியில் தூக்கிவிட்டனர். டாக்சி ஓட்டுநர் லோராங் 25 ஏ கெய்லாங்கில் (Lorong 25A Geylang) நிறுத்தி வினோத் ராஜை எழுப்பியுள்ளார். அப்போது வினோத் ராஜுக்கும், டாக்சி ஓட்டுநருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அதே நேரத்தில் சரியான இடத்திற்கு வரவில்லை என்று வினோத் ராஜ் கூற, ஹோட்டலுக்கு செல்ல கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஓட்டுநர் கூறியுள்ளார்.

 

பின்னர், வினோத் ராஜ் பணம் கொடுக்க மறுத்து டாக்சியில் இருந்து அவரும், அவரது காதலியும் வெளியேறினர். டாக்சி ஓட்டுநர் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது, வினோத் ராஜ் ஓட்டுநரை கடுமையாக தாக்கியுள்ளார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வினோத் ராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்ட ஓட்டுநரை ராஃபிள்ஸ் மருத்துவமனையில் (Raffles Hospital) அனுமதித்தனர். அவருக்கு இடது கை மற்றும் இடது கன்னத்தில் வீக்கம் உள்ளிட்ட காயங்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

 

இந்த வழக்கு தொடர்பாக வினோத் ராஜை நீதிமன்றத்தில் காவல்துறையினர் நேரில் ஆஜர்படுத்தினர். வினோத் ராஜ் தனது தவறை ஒப்புக்கொண்டதையடுத்து, வினோத் ராஜுக்கு 2,000 சிங்கப்பூர் வெள்ளி டாலரும், இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

இதற்கு முன்பாக, அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டிய வழக்கில் வினோத் ராஜ் 10,000 சிங்கப்பூர் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக வரும் ஜூன் 29- ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.