சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளர் ஆவதற்கு லஞ்சம்; ICA பெண் அதிகாரி மற்றும் அவரின் மகள் கைது..!

ICA officer and daughter charged for accepting bribe to expedite Malaysian’s PR application

சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளர் (பிஆர்) விண்ணப்பத்தைத் துரிதப்படுத்துவதற்காக மலேசிய பெண்ணிடமிருந்து லஞ்சம் பெற்றதற்காக சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனை ஆணைய அதிகாரி ஒருவர் மீதும் அவரது மகள் மீதும் நேற்று அக்டோபர் 10 நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, ஆஜர் படுத்தப்பட்டனர்.

லூசி டியோ (வயது 49) சிங்கப்பூர் குடிநுழைவுச் சோதனை ஆணையத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி மற்றும் அவரது மகள் ‌ஷேரன் லூ வாய் வூன்னுடன் சேர்ந்து மலேசிய ஃபென்னி டே ஹுயி நீயிடமிருந்து $1,500 லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு மற்றும் சிங்கப்பூர் போலிஸ் படையும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பெண்கள் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் டியோவுக்கும், லூவுக்கும் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறையும் $100,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

குடிநுழைவுச் சோதனை ஆணையத்தின் மத்திய அடையாளப் பதிவக, தகவல் திட்டத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்திய காரணத்தினால் 20 குற்றச்சாட்டுகளை டியோ எதிர்நோக்கியுள்ளார்.

அந்த இணையத் திட்டத்தினுள் 20 முறை அனுமதியின்றி நுழைந்த டியோ, 11 முறை ஃபென்னியின் நிரந்தரவாச விண்ணப்பத் தரவுகளைப் பார்வையிட்டுள்ளார்.

மேலும், ஆறு முறை மற்றொரு பெண்ணின் நிரந்தர குடியுரிமை விண்ணப்பங்களைப் பார்வையிட்டுள்ளார். முறைகேடான கணினி பயனீட்டுச் சட்டத்தின்கீழ் இந்தக் குற்றங்களுக்கு $5,000 வரை அபராதமும் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறையும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.