வேலையின்மை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்ட மனிதவள அமைச்சகம்!

Photo: Ministry Of Manpower in Singapore

 

உலகில் கொரோனா வைரஸ் தொற்று ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சில நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் இளைஞர்கள் ஆவர். வேலையை இழந்துள்ள இளைஞர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றன.

 

அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டில் குடிமக்கள் (Citizens) மற்றும் நிரந்தர குடியுரிமையைப் பெற்றவர்கள் (Residents) ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை குறித்த புள்ளி விவரங்களை மனிதவள அமைச்சகம் (Singapore Ministry Of Manpower) வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, வேலையின்மை விகிதம் கடந்த மாதங்களை ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் குறைந்துள்ளது. சிங்கப்பூர் குடிமக்களின் வேலையின்மை விகிதம் 0.1 சதவீதம் குறைந்து 4.1 சதவீதமாகவும், சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமைப் பெற்றவர்களின் வேலையின்மை விகிதம் 4 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஒட்டு மொத்த வேலையின்மை விகிதத்தில் மாற்றம் இல்லை. கடந்த மார்ச் மாதம் போன்று ஏப்ரல் மாதத்திலும் இது 2.9 சதவீதமாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் சிங்கப்பூர் மக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமைப் பெற்றவர்கள் என சுமார் 92,100 பேர் வேலையில்லாமல் உள்ளனர். இதில் 82,800 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்ந்தது. அக்டோபர் மாதம் வரை இதே நிலையே நீடித்த நிலையில், நவம்பர் மாதம் முதல் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

 

இந்த நிலையில் மனிதவளத்துறை அமைச்சர் டான் சீ லெங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “வேலையின்மை விகிதங்களைத் தொடர்ந்து கண்காணிப்போம். குறிப்பாக, சில துறைகளில் உள்ள வணிகங்கள் சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் சவால்களை எதிர்கொள்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.