இயல்பு நிலைக்கு திரும்பிய ‘UOB’ வங்கி சேவைகள்!

Photo: Google Play Store

 

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல வங்கிகளில் ஒன்று யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி (United Overseas Bank Ltd- ‘UOB’). கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த வங்கியில் சுமார் 24,853 பேர் பணியாற்றி வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்த வங்கியில் நேற்று (04/07/2021) வங்கி இணைய சேவை மற்றும் மொபைல் வங்கி சேவைகளை (Mobile Banking Services) வாடிக்கையாளர்களால் மேற்கொள்ள முடியவில்லை. நேற்று (04/07/2021) நண்பகலில் இருந்து வங்கியின் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளவில்லை என்று வாடிக்கையாளர்கள் கூறினர். மேலும், அவர்கள் வங்கி சேவை இடையூறு தொடர்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் புகார் தெரிவித்தனர்.

 

இதையடுத்து, யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி நேற்று (04/07/2021) மதியம் 01.00 மணிக்கு தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வங்கி சேவை இடையூறு தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், “வங்கி சேவையில் ஏற்பட்ட இடையூறுகளை ஒப்புக்கொள்கிறோம். யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி மைட்டி (UOB Mighty) அல்லது வங்கியின் இணைய (Internet Banking) சேவையைப் பயன்படுத்த முயற்சிக்கும் போது நீங்கள் சந்திக்கும் இடையூருக்கு நாங்கள் வருந்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

 

மேலும், வங்கியின் தானியங்கி டெல்லர் இயந்திரங்கள் (ஏடிஎம்கள்) (Automated Teller Machines- ‘ATMs’) பாதிக்கப்பட்டுள்ள சிலர் புகார் தெரிவித்திருந்த நிலையில், ஆனால், வங்கியின் ஏடிஎம்கள் தொடர்ந்து செயல்படுவதாக வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

வங்கியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தனிநபர் இணைய வங்கி சேவை (Personal Internet Banking Services) நேற்று (04/07/2021) மதியம் 12.30 மணிக்கு சரி செய்யப்பட்டது. இதனால் வங்கியின் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அதேபோல், வங்கியின் மைட்டி (UOB Mighty) சேவை மதியம் 02.30 மணிக்கு சரி செய்யப்பட்டது. எங்கள் அமைப்புகள் பாதுகாப்பாக இருப்பதை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவிக்கிறோம். வங்கி சேவையில் மீண்டும் இடையூறு ஏற்படாத வண்ணம், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.