புதுப்பொலிவுடன் சிங்கப்பூர் – அடுத்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் எப்படி இருக்கும் தெரியுமா?

சிங்கப்பூரின் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் நீண்டகால மறுசீரமைப்பு திட்டங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் எப்படி எல்லாம் இருக்கும் என்று கண்காட்சி மூலம் விளக்கப்பட்டது. ‘நம் கனவுகளுக்கான இடம் ’ என்ற தலைப்பில் யு ஆர் ஏ சென்டர் கட்டிடத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை கண்காட்சியானது நடைபெறுகிறது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் நீண்டகாலத் திட்டத்தில் முக்கியமான ஏழு அம்சத் திட்டங்கள் உள்ளன. அத்திட்டங்கள் ஒவ்வொரு பத்து வருடத்துக்கு ஒருமுறை மறு பரிசீலனை செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

அரசாங்கத்தால் கட்டித்தரப்படும் வீடுகளும் தனியார் வீடுகளும் இன்னும் சிறந்த முறையில் கலந்து இருக்கும் வகையில் மேம்படுத்தப்படும். ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கு அருகில் தனியார் மற்றும் அரசு வீடுகள் கலந்து இருக்கும்.

வர்த்தக இடங்கள் 15 முதல் 30 ஆண்டு வரையிலான குத்தகைக்கு கொடுக்கப்பட்டு ,நிறுவனங்கள் அதிவேக மாற்றங்களை ஏற்படுத்த அனுமதிக்கப்படும்.

செந்தோசா, பிராணி தீவு ஆகிய இரண்டும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உல்லாச ஓய்வு மற்றும் சுற்றுலா வாய்ப்புகளைக் கொண்ட சிறந்த இடங்களாக மாற்றியமைக்கப்படும்.

மரினா பேயிலுள்ள உல்லாச தளங்களை விரிவுபடுத்துவது மற்றும் பிற பகுதிகளில் சுற்றுலா வசதியை மேம்படுத்துவது ஆகியவை கவர்ச்சி அம்சங்களில் அடங்கும்.

சிங்கப்பூரில் தனித்தன்மையான வழித்தடங்கள் உருவாக்கப்படும். ரயில் வழித்தடம் முதலானவை இவற்றில் அடங்கும். மேலும் சிங்கப்பூரின் கடலோர பகுதிகள் முழுவதும் கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெறும்.

பாய லேபார் விமானத்தளம் 2030ஆம் ஆண்டிற்குள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அந்த இடத்தில் வீடுகள் வேலைகள் என்று புதிய தலைமுறை நகராக உருவாக்கப்படும்