அமெரிக்காவுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் சுதந்திர தின வாழ்த்து!

Photo: President Of Singapore Official Facebook Page

 

அமெரிக்காவின் 245- வது சுதந்திர தினமான இன்று (04/07/2021) அந்நாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, வர்த்தக நகரமான நியூயார்க் சிட்டியில் மக்கள் சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றன.

 

அதேபோல், உலக நாடுகளின் தலைவர்களும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், அமெரிக்க அதிபருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் கடிதம் மூலம் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

சிங்கப்பூர் அதிபர் எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், “எங்கள் இரு நாடுகளுக்கிடையேயான நெருங்கிய நட்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நலன்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த 55 ஆண்டுகளில் பாதுகாப்பு, பொருளாதாரம், மக்கள் உறவுகளில் எங்களது வலுவான உறவுகளுக்கு வழிகாட்டியுள்ளது. இந்த சவாலான காலங்களுக்கு இடையில், சிங்கப்பூருக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், தூய்மையான ஆற்றல், டிஜிட்டல் பொருளாதாரம், உட்கட்டமைப்பு நிதி, பொது சுகாதாரம் மற்றும் இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பகுதிகள் விரிவடைந்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஈடுபாட்டை ஆதரிக்க சிங்கப்பூர் உறுதிப் பூண்டுள்ளது. எங்கள் பகிரப்பட்ட நலன்களை முன்னேற்றுவதற்கும், பிராந்திய ரீதியாகவும், உலகளவில் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கும், இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.