டைனோசர் காலத்தில் வாழ்ந்த சிங்கப்பூர் வெல்வெட் புழு – தீவிர ஆராய்ச்சியில் நன்யாங் பல்கலைகழக அறிவியலாளர்கள்

velvet worm singapore nanyang university scientists pulau ubin

சிங்கப்பூரின் நன்யாங் பல்கலைக் கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய வெல்வெட் புழு ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.சிங்கப்பூரின் புலாவ் உபின் தீவில் உள்ள காடுகளில் நீண்ட காலத்துக்கு முன்னர் வாழ்ந்த புழுக்களின் புதிய இனமாக இது இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த வகை புழுக்கள் ‘ஒனிசோபோரா’ என்று அழைக்கப்படுகின்றன.மேலும், இவை டைனோசார் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் ,சிங்கப்பூர் எனும் தீவு நகரம் உருவாவதற்கு முன்,பல மில்லியன் ஆண்டுகளாக இந்தத் தீவின் புவியியல் அமைப்பு இருந்திருக்குமோ என்ற கேள்வி எழுகின்றது.

இந்தப் பல்கலைகழகத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பார்கி சர்மா , “மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வைத் தொடங்கிய போது சிங்கப்பூரை பூர்விகமாகக் கொண்ட இந்த வெல்வட் புழுக்கள் இங்கு காணப்படுவதாக அறிந்தோம்.எனவே அவற்றை எங்கள் அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த முடிவு செய்தோம்” என்று கூறினார்.

சிங்கப்பூரை பூர்விகமாகக் கொண்டது இந்த வெல்வெட் புழு என்று கூறினாலும் நீண்ட காலத்திற்கு முன்பு தாய்லாந்திலிருந்து அது இங்கு வந்திருக்கலாம் என்று பார்கி கூறினார்.இந்த வகைப் புழுக்கள் மற்ற புழு வகைகளில் இருந்து மாறுபட்டு இருப்பதால் ஆய்வாளர்களின் கவனத்துக்கு இது வந்தது.குறிப்பிடத்தக்க சில மரபணு மாற்றங்கள் சிங்கப்பூர் வெல்வட் புழுவில் இருப்பதாக டாக்டர் யாங் கூறினார்.

இந்த புழுவின் மாதிரிகள் ஜெர்மனியிலுள்ள பகுப்பாய்வாளர்கள் குழுவிற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.இது புதிய வகை உயிரினம் என்பது உறுதி செய்யப்பட்டால்,அதன் பெயருடன் ‘சிங்கபுராவை’ இணைக்க குழு திட்டமிட்டுள்ளது.