சிங்கப்பூரில் போர்க்கால வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு அகற்றம்..!

சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு பாதுகாப்பாக முறையில் அகற்றப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜியாக் கிம் ஸ்ட்ரீட்டில் கட்டுமானப் பணிகளுக்காக நிலந்தோண்டும் பணியின்போது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 50 கிலோகிராம் எடைகொண்ட அந்த வெடிகுண்டு இன்று மாலை மணி 4.35க்கு செயலிழக்கச் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெடிகுண்டைச் சுற்றிலும் 200 மீட்டர் தொலைவுக்குப் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஒரு பார்வையாளர் அனுப்பிய காணொளியில் காலை 11 மணிக்கு வெடிப்புச் சத்தம் கேட்டது என பதிவாகியுள்ளது.

காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணிவரை Mirage Tower, Waterfront, Rivergate ஆகிய கூட்டுரிமை வீடுகளின் குடியிருப்பாளர்கள் வீடுகளைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வட்டாரத்தில் உள்ள Grand Copthorne Waterfront ஹோட்டலில் தங்கியிருப்பவர்களும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், அங்குள்ள இடங்கள், சாலைகள், வடிகால்கள், கட்டடங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.

ரிவர் வேலி கிரீன், கிம் செங் ரோடு, ஜியாக் கிம் ஸ்ட்ரீட் ஆகியவை மூடப்பட்டுள்ளன. மேற்கொண்டு தகவல்கள் வெளியிடுப்படும்வரை அந்த இடங்களைத் தவிர்க்கும்படி பொதுமக்கள் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.