வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்திய முதலாளிக்கு சிறை!

சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணைப் பலமுறை துன்புறுத்திய வீட்டு முதலாளிக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய வீட்டு உதவியாளரை துன்புறுத்தி, மூக்கை உடைத்து, பிளாஸ்டிக் கிண்ணத்தைப் பயன்படுத்தி தலையை உடைத்தது போன்ற குற்றங்களுக்காக நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) வீட்டு முதலாளிக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த 27 வயதான ராசி என்ற பெண்மணி ஒரு கூட்டுரிமை வீட்டில் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வீட்டு பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வருகிறார். வீட்டு முதலாளி ஜென்னி சான் யுன் ஹுய் (42 வயது), பணிப்பெண் ராசி செய்யவேண்டிய தினசரிப் பணிகளை அட்டவணைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த அட்டவணை பணிகளை ராசி நேரத்திற்கு முடிக்கத் தவறும்போதெல்லாம், சான் அவரை அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல், அண்டைவீட்டுக்காரர்களோடு பேசவும், கைத்தொலைபேசியில் உரையாடவும் சான் தடைவித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

சானின் மனஅழுத்தம், அவரது உணர்ச்சிகளைக் குறைவாகக் கட்டுப்படுத்துவதாகவும், அதன் காரணமாக அவர் இந்த குற்றங்களில் ஈடுபட்டதாகவும் நீதிபதி கூறினார்.

இந்த குற்றச்செயலுக்காக, சானுக்கு 15 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சிங்கப்பூர் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.