லிப்டில் ‘பி.எம்.டி.’யில் தீப்பிடித்து இளைஞர் உயிரிழப்பு!

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

 

சிங்கப்பூரில் உள்ள உட்லேண்ட்ஸ் டிரைவ் 16 (Woodlands Drive 16) ப்ளோக் 537 இன் (Block 537) இரண்டாவது மாடியில் உள்ள லிப்டில் இளைஞர் ஒருவர் கொண்டு சென்ற பி.எம்.டி. சாதனத்தில் (Personal Mobility Device- PMD) நேற்று முன்தினம் (03/06/2021) இரவு 11.25 PM மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் (Singapore Civil Defence Force) அங்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வாளிகளில் தண்ணீரை நிரப்பி, அதைப் பயன்படுத்தி தீயை அணைத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், லிப்டில் 80% பகுதி தீக்கரையானது.

 

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த 20 வயது இளைஞர் ஒருவர் அருகில் உள்ள கூ டெக் புவாட் மருத்துவமனையில் (Khoo Teck Puat Hospital) அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த இளைஞருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

 

மேலும் தீ விபத்து காரணமாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 90 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

 

தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அதில், லிப்டில் உள்ள பி.எம்.டி. (Perosnal Mobility Device) என்ற சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவுவே தீ விபத்துக்கு காரணம் என்று காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

 

இந்த நிலையில், ‘யுஎல் 2272’ (UL 2272) வகை அல்லாத பி.எம்.டி.கள் (PMDs) மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பி.எம்.டி.களால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இவை பங்கம் விளைவிக்கும் என்று சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

இந்த பி.எம்.டி. சாதனங்களின் உரிமையாளர்கள் சாதனங்களைப் பொருத்தமான முறையில் மறுசுழற்சி செய்து அப்புறப்படுத்த ஊக்குவிக்கப்படுவதாகவும், ஜூன் மாதம் 30- ஆம் தேதி வரை பி.எம்.டி. சாதனங்களை எந்தவொரு கேஜிஎஸ் பிடிஇ லிமிடெட் (KGS PTE LTD) சேகரிப்பு இடத்திலும் எந்த கட்டணமும் இல்லாமல் அப்புறப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.