உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தானியங்கி கியோஸ்க்குகள் மூலம் குடிவரவு அனுமதி – இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுருமா !

Contactless clearance Woodlands

ஜூன். 21ஆம் தேதி முதல் அக்டோபர் வரை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குச் செல்பவர்கள், புதிய தானியங்கி பயணிகள் கார் அனுமதி அமைப்பை (Automated Passenger In-Car Clearance System – APICS) முயற்சி செய்யலாம். இது பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து, முகம் மற்றும் கருவிழி பயோமெட்ரிக்ஸ் மூலம் தொடர்பில்லாத குடியேற்ற அனுமதி முடித்து சோதனைச் சாவடி வழியாக நாட்டிற்குள் நுழைய அனுமதி அளிக்கிறது.

இந்த திட்டம் இன்னும் பரிசோதனையில் இருப்பதால், காரில் பயணித்தவர்களின் எண்ணிக்கையை கவனிக்க குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் அங்கு இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதலில் டோல் திறந்தவுடன், காரை சுய உதவி கியோஸ்கில் நிறுத்த வேண்டும். ( kiosk என்பது கணினித் திரையில் தகவல் மற்றும் சேவைகளை வழங்கும் ஒரு சிறிய சாதனம்). அதில்  பாஸ்போர்ட் ஸ்கேனர், பயோமெட்ரிக் ஸ்கேனர், கைரேகை ஸ்கேனர் மற்றும் இண்டர்காம் ஆகியவற்றுடன் எல்சிடி டச் டிஸ்ப்ளே இருக்கும். ஓட்டுநர், காரில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் உரிமத் தகடு எண்ணை உறுதி செய்து, பயணிகளின் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் இந்த அமைப்பு ஓட்டுநரையும் பயணிகளையும் ஒரே நேரத்தில் அவர்களின் முகம் மற்றும் கருவிழிகளை ஸ்கேன் செய்து அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும். அனைத்து பயணிகளின் முகத்தையும் கருவிழியையும் ஸ்கேன் செய்ய, காரின் ஜன்னல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்று என நான்கு ஸ்கேன்னர்கள் இருக்கும். எந்த வகையான கார் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப கியோஸ்கின் உயரம் மாறிக் கொள்ளும் என்றும் குடிவரவு அனுமதியை முடிக்க ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.