பணியிடங்களில் பாகுபாடா?? – உடைத்தெறிய அமலுக்கு வரும் புதிய சட்டம்…

(photo: today)

சிங்கப்பூரில் பணியிடங்களில் முதலாளிகள் ஊழியர்களிடம் பாகுபாடு காட்டினால் சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பணியிடங்களில் அனைவரையும் சமமாக நியாயமுடன் நடத்துமாறு வலியுறுத்தக்கூடிய 20 பரிந்துரைகள் சட்டமாக உள்ளன.

ஆகையால், எந்தவிதமான நிலையிலும் சட்டம் உதவிக்கு முன்வரும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்தச் சட்டமானது, ஒரு நபரை வேலையில் சேர்ப்பது முதல், வேலையில் இருந்து விலகும் தருணம்வரை எல்லா இடங்களிலும் நியாயமான போக்கைக் கடைபிடிக்க வலியுறுத்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமட்டுமின்றி, இனிமேல் பணியிட நியாயச் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட நபர் நடுவர் மன்றத்தில் இழப்பீடு கோரும் உரிமைகளும் உள்ளது. அதேசமயம், ஏற்கனவே நியாயமான வேலைநடைமுறையை வலியுறுத்தும் முத்தரப்பு வழிகாட்டி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்பு, ஒரு ஊழியர் வேலையில் இருந்து தவறாக நீக்கப்பட்டால் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்ற சூழல் இருந்துள்ளது. ஆனால், புதிய சட்டம் வந்த பிறகு ஒருவர் வேலையில் இருக்கும்போது எந்தக் கட்டத்தில் அநீதி நடந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்க இடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.