கட்சிப் பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் ரயீசா கான்!

Photo: Raeesah Khan's

பாட்டாளி கட்சியின் நிர்வாகி (Worker’s Party) மற்றும் செங்காங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ரயீசா கான் (Raeesah Khan). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, பாலியல் வன்முறை தாக்குதலுக்குள்ளான ஒரு பெண், காவல்துறையினரிடம் புகார் அளிக்க சென்ற போது, அந்த சம்பவத்தை காவல்துறையினர் தவறாகக் கையாண்டனர். அப்போது, அந்த பெண்ணுடன் நானும் காவல்நிலையத்திற்கு சென்றிருந்தேன் என்று கூறியிருந்தார். இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இது மிகப்பெரிய விவாதமாக மாறியது.

சிங்கப்பூரில் மேலும் 1,239 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

இந்த நிலையில், நவம்பர் 1- ஆம் தேதி அன்று மீண்டும் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, பாலியல் வன்முறை தாக்குதலுக்குள்ளான பெண் விவகாரத்தில் தான் பொய் சொன்னதை அவையில் ஒப்புக் கொண்டார். மேலும், இது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று கூறினார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு, அக்குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இவ்விவகாரத்தில் பாட்டாளி கட்சிக்கு சில பரிந்துரைகளையும் இக்குழு அளித்திருந்தது.

இந்த பரிந்துரைகள் குறித்து விவாதிப்பதற்காக பாட்டாளி கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (30/11/2021) மாலை மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரயீசா கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், இவ்விவகாரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழக விமான நிலையங்களில் தீவிரமாகும் சோதனைகள்: சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு!

இந்த நிலையில், கட்சிப் பொறுப்பு மற்றும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக ரயீசா கான் அறிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தை அவர், தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரயீசா கான் பதவி விலகளால் சிங்கப்பூர் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.