மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி கத்திக் கூச்சலிட்ட இளைஞர்… அபராதம், வாகனம் ஓட்டத் தடை விதித்த நீதிமன்றம்!

(Photo: TODAY)

 

சிங்கப்பூரில் வசித்து வருபவர் மாவெரிக் நியோ யோங்சியாங் (Maverick Neo Yongxiang). இவருக்கு வயது 27. இவர் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்த மே மாதம் 21- ஆம் தேதி அன்று நள்ளிரவு 11.50 மணியளவில் தனது வீட்டில் மது அருந்திவிட்டு, தனது முன்னாள் காதலியைச் சந்திப்பதற்காக காரில் அவர் வீட்டிற்கு சென்றார். பின்பு, காதலி வசிக்கும் பிளாட்டின் கதவைத் தட்டினார். மேலும், கத்திக் கூச்சலிட்டார். சத்தத்தைக் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த அந்த பெண்ணின் தந்தையிடம் உங்கள் மகளைப் பார்க்க வேண்டும் எனக் கோரினார்.

 

நியோ மது அருந்தியிருப்பதை அறிந்துக் கொண்ட அந்த பெண்ணின் தந்தை கதவைத் திறக்காமல், அவள் வீட்டில் இல்லை. நீங்கள் பிளாட்டில் இருந்து வெளியேறுங்கள் என்று வலியுறுத்தினார்.

 

இருப்பினும் நியோ தொடர்ந்து கதவைத் தட்டிக் கொண்டும், மிக சத்தத்துடன் கூச்சலிட்டும் இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு தனது வீட்டிற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். ஆனால் தனது முன்னாள் காதலியை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று முயற்சிக்க முடிவு செய்தார். அப்போது, தவறாக தனது முன்னாள் காதலியின் பிளாட்டுக்கு பதில், பக்கத்து வீட்டு பிளாட்டுக்கு சென்று கதவைத் தொடர்ச்சியாகத் தட்டியும், உதைக்கவும் செய்தார். உடனடியாக அந்த வீட்டு நபர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

 

அதன் அடிப்படையில், அங்கு வந்த காவல்துறையினர் மாவெரிக் நியோ யோங்சியாங்-கை அன்றைய தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கு நேற்று (05/07/2021) விசாரணைக்கு வந்தபோது நீதிபதி முன் மாவெரிக் நியோ யோங்சியாங் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்தது, குறும்புத்தனம் செய்தது, குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியது ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

 

இதனிடையே, நியோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சப்ரிந்தர் சிங் (Lawyer Sabrinder Singh), “நியோ நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதேபோல், பக்கத்துக்கு வீட்டு பிளாட்டில் வசிப்பவருக்கு நியோ மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதனை அந்த வீட்டில் வசிப்பவரும் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, குறைந்தபட்ச தண்டனையாக அபராதம் மட்டுமே நியோவுக்கு விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

 

இதையடுத்து, நீதிபதி அவருக்கு 6,400 சிங்கப்பூர் டாலர் அபராதமாக செலுத்த வேண்டும்; இரண்டரை ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.

 

பொதுமக்களுக்கு தொல்லைக் கொடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை (அல்லது) 2,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படலாம் (அல்லது) அபராதம் மற்றும் சிறைத்தண்டனை இரண்டும் விதிக்கப்படலாம்.

 

மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை (அல்லது) 5,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் (அல்லது) சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.