தோனி ஓய்வு குறித்து பரபரத்த இந்திய மீடியாக்கள் – டோட்டலாக ஆஃப் செய்த சாக்ஷி தோனி

dhoni retirement sakshi dhoni tweet bcci
dhoni retirement sakshi dhoni tweet bcci

நேற்று காலை முதலே தோனி ஓய்வு குறித்து சமூக தளங்களில் ட்வீட்கள் தெறிக்கத் தொடங்கின. தென்னாப்பிரிக்க தொடர் தொடங்க இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில், தோனி ஓய்வு குறித்த செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வந்தன.

அதற்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலியின் பதிவு.

இந்தியாவில் கடந்த 2016-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை டி20 காலிறுதி ஆட்டத்தில் விராட் கோலியும், தோனியும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப் பெறச் செய்தனர்.

அந்த தருணங்களை நினைவு கூர்ந்த விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் “அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். தோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்” என பதிவிட்டிருந்தார். இது ஒன்று போதாதா என்ன…?

இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு தோனி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றும், அப்போது தனது ஓய்வு குறித்து அறிவிக்கலாம் என்று பரவலாக இந்திய மீடியாக்களில் செய்திகள் பரபரத்தன.

ரசிகர்கள் சோக கவிதைகளை அள்ளித் தெளிக்க, இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர், ‘தோனி ஓய்வு பெறுவதாக வரும் செய்தி உண்மையிலை” என்று விளக்கமளித்ததாக செய்தி வெளியானது. இதுவும் ஒரு செய்தியாக வெளியானதே தவிர, எப்போது அவர் சொன்னார், எங்கே சொன்னார் போன்ற எந்தத் உறுதியாக தகவலும் இல்லை.

இந்தச் சூழ்நிலையில் தான், தோனியின் மனைவி சாக்ஷி, தனது ட்விட்டர் பக்கத்தில் “இவை வதந்திகள்” என்று பதிவிட்டு, பலர் வாய்களில் வெவ்வேறு டோனில் வலம் வந்த தோனி குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

எல்லோரும் இனி அவங்கவங்க வேலையைப் போய் பார்க்கலாம்!.