அபாயகரமாக பந்து வீசும் ஆர்ச்சர் – ‘ரத்தம்’ பார்க்காமல் ஓய மாட்டார் போல் தெரிகிறது!

Does archer want Aussie blood?

இங்கிலாந்தில் தற்பொழுது புகழ் பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற நோக்கில் இங்கிலாந்து அணி இருந்தது.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மூத்த வீரர் ஜிம்மி ஆன்டேர்சன் காயம் காரணமாக விலகிய நிலையில் இளம் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம் பிடித்தார். முதல் இன்னிங்சில் 8 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 258/5 என்று டிக்ளேர் செய்தது.

இதனை அடுத்து 267 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஓவருக்கு 5.56 ரன்கள் என்ற விகிதத்தில் எடுக்க வேண்டிய நிலையில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி ஜோப்ரா ஆர்ச்சரின் தீப்பொறி பந்து வீச்சில் அவரிடம் 3 விக்கெட்டுகளை இழக்க ஜாக் லீச் (ஸ்பின்னர்) 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 47.3 ஒவர்களில் 154/6 எடுத்த நிலையில் ஆட்டம் முடிவு பெற்றது.

267 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சரின் மின்னல் வேக பந்து வீச்சு பெரும் சவாலாக இருந்தது. வார்னர் (5) கவாஜா (2) ஆகியோர் ஆர்ச்சரிடம் அவுட் ஆகி வெளியேற, ஆஸ்திரேலியா 47/3 என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

பிறகு, ஸ்மித்துக்கு பதிலி வீரராக களமிறங்கிய லபுஷேன் (59), ட்ராவிஸ் ஹெட் (42) ஆகியோர் ஸ்கோரை 132 வரை கொண்டு சென்றனர், லபுஷேன் 59 ரன்களில் லீச்சிடம் வெளியேற மீண்டும் ஒரு சரிவு கண்டது ஆஸி.

மேத்யூ வேட் விக்கெட்டையும் லீச் வீழ்த்தினார் டிம் பெய்ன், ஆர்ச்சர் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட, நன்றாக ஆடிய போதும் டென்லியின் அபாரமான இடது கை கேட்சுக்கு வெளியேற நேரிட்டது, கடைசியில் ஹெட் 42 நாட் அவுட், கமின்ஸ் 1 நாட் அவுட் என்று முடிய ஆட்டம் ஒருவிதமாக ட்ரா ஆனது.

ஸ்மித்தின் கழுத்தைப் பதம் பார்த்து அவரை சிகிச்சைக்கு அனுப்ப முதல் கன்கஷன் பதிலி வீரர் லபுஷேன் களமிறங்கியவுடன் ஜோப்ரா ஆர்ச்சர் மணிக்கு 93.6 மைல் வேகத்தில் ஒரு பந்தை குத்தி எழுப்ப நேராக ஹெல்மெட் முன்பக்க கம்பியை பலமாகத் தாக்கியது. நிலைகுலைந்தார் லபுஷேன், மைதானத்துக்குள் மருத்துவக் குழு நுழைந்தது, சில நிமிடங்களில் லபுஷேன் சுதாரித்து மீண்டும் பேட் செய்து டெஸ்ட் ட்ரா ஆவதை அரைசதம் மூலம் உறுதி செய்தார்.

ஆனால் சில பல ஷார்ட் பிட்ச் பவுன்சர் அடிகளை ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவர் வாங்கினார். எல்.பி அப்பீல் ஒன்றிலும் தப்பினார். ஏதோ ‘பாடி லைன்’ பவுலிங் போல் ஜோப்ரா ஆர்ச்சர் வீசுகிறார், இந்த ஆஷஸ் தொடரில் அவர் ‘ரத்தம்’ பார்க்காமல் ஓய மாட்டார் போல் தெரிகிறது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

லபுஷேனுக்கு மட்டுமல்ல உஸ்மான் கவாஜாவுக்கு 90 மைல் வேக ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தியைக் கடைபிடித்தார் ஆர்ச்சர், உலகின் அபாயகரமான பவுலர் இப்போதைக்கு ஆர்ச்சர்தான் என்ற அளவுக்கு அவர் வீசுகிறார்.