IND vs SA, World Cup Match 2019: ரோஹித் அபார சதம், இந்தியா கிளீன் வெற்றி!

IND vs SA, World Cup Match 2019: ரோஹித் அபார சதம், இந்தியா கிளீன் வெற்றி!
IND vs SA, World Cup Match 2019

Ind vs SA World Cup Match Result 2019: உலகக் கோப்பை 2019 தொடரில், நேற்று(ஜூன்.5) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சவுத்தாம்படன் நகரில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிட்ச் பேட்டிங்குக்கு கைக்கொடுக்கும் என பிட்ச் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டதால், அதனடிப்படையில் பேட்டிங் தேர்வு செய்யப்பட்டது. இந்தியா டாஸ் வென்றிருந்தாலும் பேட்டிங் தான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் டாஸ் வென்ற டு பிளசிஸ் சத்தமின்றி பேட்டிங் தேர்வு செய்ய, டி காக், ஆம்லா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். புவனேஷும், பும்ராவும் ஸ்விங் தாக்குதல் தொடுக்க, தடுமாறிப் போனார்கள் தென்.ஆ., ஓப்பனர்கள்.

ஆம்லா 6 ரன்னிலும், டி காக் 10 ரன்னிலும் அடுத்தடுத்து பும்ரா ஓவரில் கேட்சாக, கேப்டன் டு பிளசிஸ் – வான்டர் டூசன் ஜோடி சற்று தாக்குப்பிடித்து ஆடியது. இருப்பினும், சாஹல் அட்டாக் செய்ய ஆரம்பித்த பிறகு மீண்டும் வரிசையாக விக்கெட்டுகள் விழத் தொடங்கியது.

டு பிளசிஸ் 38 ரன்னிலும், டூசன் 22 ரன்னிலும், டேவிட் மில்லர் 31 ரன்னிலும் அடுத்தடுத்து சாஹல் ஓவரில் வீழ்ந்தனர்.

டுமினியை 3 ரன்னில் குல்தீப் காலி பண்ண டோட்டல் அஸ்திவாரமும் ஆட்டம் கண்டு போனது.

அதன்பிறகு ஆன்டிலே பெலுக்வாயோ 34 ரன்களும், க்றிஸ் மோரில் 42 ரன்களும், காகிசோ ரபாடா 31 ரன்களும் எடுத்து இறுதிக் கட்டத்தில் அணிக்கு பங்களிக்க, தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 ரன்களில் ரபாடா ஓவரில் கேட்சாக, கேப்டன் கோலி 18 ரன்களில் பெலுக்வாயோ பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பிறகு, நான்காவது ஸ்லாட்டில் களமிறங்கிய லோகேஷ் ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் ஷர்மா, மிக நேர்த்தியாக ஆட்டத்தை கடத்திச் சென்றார். அரைசதம் விளாசிய ரோஹித், தொடர்ந்து சதமும் விளாச, சவுத்தாம்ப்டன் அரங்கம் இந்திய தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டது.

இதற்கிடையில் லோகேஷ் ராகுல் 26 ரன்களில் வெளியேற, தோனி 34 ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும், கடைசி வரை களத்தில் நின்ற ரோஹித் ஷர்மா 144 பந்தில் 122 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம், தென்னாப்பிரிக்கா தான் ஆடிய மூன்று ஆட்டங்களிலும் தோற்றிருக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் வெற்றிப் பெற்றிருக்கிறது.