உங்களுக்கு வயசு ஆகவே இல்ல; 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்து மலிங்கா அபார சாதனை!!

Lasith Malinga takes historic hat-trick after becoming 1st bowler to 100 T20I wickets

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை எடுத்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா சாதனை படைத்துள்ளார்.

பல்லேகலவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 126 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் பேட் செய்த நியூசிலாந்து, தொடக்கம் முதலே இலங்கையின் பந்துவீச்சில் தடுமாறியது.

குறிப்பாக, லசித் மலிங்காவின் மிரட்டல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியமால் நியூசிலாந்து அணி பெரிதும் தடுமாறியது. நியூசிலாந்து பேட்டிங்கில் 3-வது ஓவரை வீசிய மலிங்கா , ஓவரின் மூன்றாவது பந்தில் முன்ரோவை ஆட்டமிழக்க செய்தார்.

அடுத்த பந்தில் ரூதர்போர்ட் ஆட்டமிழக்க, 4-வது மற்றும் 5-வது பந்துகளில் கோலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் டெய்லர் ஆட்டமிழக்க, 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்து மலிங்கா சாதனை செய்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மலிங்கா அதிக ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் மலிங்கா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் 88 ரன்களுக்கு நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 37 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.