ஆசிய அணிகளிடம் தர்ம அடி வாங்கும் இங்கிலாந்து! இலங்கை வென்ற கதை தெரியுமா?

SL beat ENG

உலகக் கோப்பை 2019 தொடரில், இங்கிலாந்து, இலங்கை அணிகள் இடையேயான ஆட்டம் நேற்று(ஜூன்.21) லீட்ஸில் நடைபெற்றது. இலங்கை அணி கேப்டன் கருணரத்னே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தனர்.

ஓப்பனர்ஸ் கருணரத்னே 1 ரன்னிலும், குசல் பெரேரா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஃபெர்னாண்டோ 49 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 46 ரன்னிலும் ஆட்டமிழந்து அரைசதத்தை தவற விட்டனர். அடுத்து வந்த முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் கடைசி வரை நின்று 85 ரன்கள் அடித்தார். இறுதியில், 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களே இலங்கையால் அடிக்க முடிந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் தலா மூன்று விக்கெட்டுகளும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஒவரிலேயே தொடக்க வீரர் பேர்ஸ்டோ 0 ரன்னில் அவுட்டாக, ஜேம்ஸ் வின்ஸ் 14 ரன்களில் வெளியேறினார். ஜோ ரூட் 57 ரன்னிலும், கேப்டன் மோர்கன் 21 ரன்னிலும் அவுட்டானார்கள். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 82 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இலங்கை தரப்பில் மலிங்கா 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.

தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், “எங்களது ஆட்டத்திறனை செயல்படுத்துவதில் கனிசமான அளவில் தவறுகள் செய்து விட்டோம். போதுமான அளவு திறமையை வெளிப்படுத்தவில்லை. எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் போது இது மாதிரி ஒரு போட்டியில் தோல்வி ஏற்படும். இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. நாங்கள் அடுத்தப் போட்டியில் எழுச்சி பெறுவோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்ரோ‌ஷமாக ஆடுவோம்” என்றார்.

வெற்றி குறித்து இலங்கை கேப்டன் கருணரத்னே கூறுகையில், “வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இது மாதிரியான ஆடுகளத்தில் 300 ரன்களை குவிக்க முடியாது. இதனால் 250 முதல் 275 ரன் வரை விரும்பினோம். மேத்யூசின் பேட்டிங் அபாரமாக இருந்தது. 232 ரன் எடுத்தாலும் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்தை கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக மலிங்காவின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. அவர் ஒரு சகாப்தம். இதே போல தனஞ்ஜெயா டிசில்வாவும் அபாரமாக வீசினார்.

மலிங்கா கூறுகையில், “இங்கிலாந்து பலம் மிக்க அணி என நன்றாக தெரியும். இறுதி கட்டத்தில் ஸ்டோக்ஸ் எப்படி விளையாடுவார் என்பதும் தெரியும். ஐபிஎல், டி20 போட்டிகளில் அவரை கவனித்துள்ளோம். இருப்பினும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. சரியாக ப்ளான் செய்து பந்தை வீசினோம். அவருக்கு அதிகமாக ரன்களை கொடுக்காமல் அழுத்தத்தை ஏற்படுத்தினோம். எங்கள் ப்ளானை சரியாக செய்து ஜெயித்தோம். பந்துகளை பல்வேறு விதமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இறுதியில் போட்டி எங்களுக்கு சாதமாகிவிட்டது. இப்போது இந்த வெற்றி எங்கள் அணி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது” என்றார்.

உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு, 400, 500, 600 ரன்கள் அடிக்கும் அணி என்று வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்து, இந்த உலகக் கோப்பையில் இதுவரை சந்தித்துள்ள இரண்டு தோல்விகளும் ஆசிய அணிகளுக்கு எதிராக தான். முதலில் பாகிஸ்தானிடம் அடி வாங்கிய இங்கிலாந்து, இப்போது இலங்கையிடம் சரண்டர் ஆகியிருக்கிறது. தொடர்ந்து ஜூன் 30ம் தேதி இந்தியாவை எதிர்கொள்கிறது.