திகில் படப் பிரியரா நீங்கள்? : உங்கள் உடலுக்கு என்ன ஆகிறது தெரியுமா?

நீண்டகாலமாகப் பார்த்தாகவேண்டுமென எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு பயங்கர திகில் படத்தை நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களின் கற்பனைக்கேற்ப படம் முழுக்க ஒரே ரத்தக்களறியாகவும் அலறல்களும் படுபயங்கரமான பின்னணி ஒலியுமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் அனுபவித்துப் பார்த்துக்கொண்டிருக்கையில், உங்கள் உடலோ நீங்கள் கற்பனைசெய்து பார்த்திராதபடி சூழலுக்கு எதிர்வினையாற்றிக்கொண்டு இருக்கும். ஒரு திரையரங்கத்தில் இருந்தாலும் சரி வேறெங்கும் பாதுகாப்பாக அமர்ந்திருந்தாலும் சரி, திகில் படத்தில் நீங்கள் மூழ்கியிருக்கும்போது, சம்பந்தமில்லாத சங்கதிகள் உங்கள் உடம்பில் நடக்கும். அவை என்னவாக இருக்கும் எனத் தெரிந்துகொள்ளவேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள்.

இதயத்துடிப்பு எகிறும்

நீங்கள் பயமுறுத்தப்படும் சமயத்தில் உங்கள் இதயத்துடிப்பு அதிகரிப்பது இயல்பானது. அப்படியான சூழலில் நீங்கள் இல்லாவிட்டாலும் திகில் படங்கள் உங்களை அந்த உணர்வுக்குள் தள்ளிவிடும். இப்படங்களைப் பார்க்கையில் முக்கியமான கதாபாத்திரத்துடன் எளிதாக ஒன்றிப்போய், நீங்களே பாய்ந்துபாய்ந்து சண்டையிடுவதாக உணர்ந்துகொள்வீர்கள். யதார்த்தம், இதைவிட அதிகமாக இருக்கலாம். பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஓர் ஆய்வில், பயங்கர திகில் படங்களைப் பார்க்கையில் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது என்றும் இதன் மூலம் உடம்பின் குறிப்பிட்ட கலோரி சக்தியானது எரிக்கப்பட்டு, உடல் எடையும் குறைக்கப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளது.

கிளர்வுறும் தசை

திகில் படம் என்று போகிறபோக்கில் சொல்லிவிடுவோம்; அதைப் பார்த்துவிட்டு இளைப்பாறுவது என்பது கடினம். முன்னர் குறிப்பிட்டபடி நீங்களே பாய்ந்து சண்டையிடுவதாக உங்களின் உணர்வுகள் முடுக்கிவிடப்படும். படத்தில் என்ன காட்டப்படுகிறதோ அதற்கேற்ப நீங்கள் தயாராகிவிடுவீர்கள்; தானாகவே விளிம்புக்குக் கொண்டுசெல்லப்படுவீர்கள். உள்ளங்கையை இறுக்கமாக்கிக்கொள்ள முயற்சிசெய்வீர்கள். இது, கேளிக்கைப்பூங்காவில் உள்ள ரோலர்கோஸ்டரில் உட்கார்ந்துசெல்வதைப் போன்ற அனுபவத்துக்கு இணையானது. திகில் படத்தைப் பார்க்கையில் நீங்கள் ஏன் எளிதாகக் கலவரமடைகிறீர்கள் என்பது இதுதான்.

மனக்கவலை போக்கும்

கேட்டால் உள்ளுணர்வுக்கு எதிரானதாகவும் படலாம்; ஆனாலும் திகில் படத்தைப் பார்ப்பது, உங்களுக்கு குறிப்பாக மனக்கவலையால் உழலும்நிலை ஏற்பட்டால் உதவியாக இருக்கும் என்பது உண்மை. பொதுவாக அதிர்ச்சியால் மனவடு உள்ளவர்கள் திகில் படத்தைப் பார்த்தால், அமுக்கப்பட்டிருக்கும் அந்த உணர்வுகள் தூண்டப்பட்டுவிடும் எனும் நம்பிக்கை பரவலாக உண்டு. வல்லுநர்களோ, திகில் படமானது திரையில் காட்டப்படும் எதற்கும் நீங்கள் ஆட்பட்டுவிடாதபடி அச்சம்நீங்கிய உணர்வை அளிக்கிறது; அதன் மூலம் உங்களை சாந்தப்படுத்துகிறது; பாதுகாப்பான ஒரு சூழலில் வைத்திருக்கிறது என்று நம்புகிறார்கள். மேலும், இப்படங்கள் மக்களின் தனிப்பட்ட மனக்கவலையை, யதார்த்தத்தில் இல்லாத ஏதோ ஒன்றின் மீது திருப்பிவிடுவதற்கான வடிகாலையும் அளிக்கிறது என்பது அவர்களின் கருத்து. .

முடக்கப்படும் மூளை

திகில் அல்லாத வேறு வகையான திரைப்படங்களைப் பார்க்கையில், உங்கள் மனம் சற்று தளர்வான நிலையை அடையும். ஏனெனில் அப்படியான படங்கள் அதை உண்டாக்குவதற்கான வாய்ப்புதான் இருக்கும். திகில் படங்களுக்கு இந்த விதி பொருந்தாது. மூளை, திகிலுக்குள் முழுவதுமாக இழுக்கப்பட்டுவிடுவதுடன் அதன் கவனக்குவிப்பும் அதிகரித்தபடி இருக்கும். அதாவது, நீங்களும் அந்தப் படமும் மட்டுமே இருப்பதான ஒரு மனநிலைக்குச் சென்றுவிடுவீர்கள். அப்போது, சிறு சலனம்கூட உங்களைத் திடுக்கிடச்செய்யலாம்; சிலிர்க்கவைக்கவும் கூடும்.