மார்க்கத்திலிருந்து மாற்றத்தை நோக்கிய பயணத்தில் சவுதி அரேபியா

பன்னெடுங்காலமாக மன்னர் ஆட்சியின் கீழ் செயல்படும் சவுதி அரேபியாவில் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளின்படியே நடந்து வந்துள்ளது. பழமையான மார்க்க நெறிமுறைகளை கண்டிப்பான முறையில் கடைப்பிடித்து வந்த அந்நாட்டில் பெண்களின் தனிநபர், விருப்ப உடை அணியும் பழக்கம் கூட மறுக்கப்பட்டது. மேலும் அந்நாட்டு மக்களின் அன்றாட நடை முறைகளை தவிர்த்து, கேளிக்கை நிகழ்ச்சிகளான விருந்து, இசைநிகழ்ச்சி போன்றவற்றிற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

மார்க்க நெறிமுறைகளை சிறிதளவு மீறினால் தண்டனை என்பது விசாரனையின்றி ‘வலி”யுடன் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய மார்க்க நெறிகளை பின்பற்றும் ‘சவுதி அரேபியா” தற்போது மாற்றத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. மார்க்கத்தின் அடிப்படையிலான சவுதி அரேபிய மன்னராட்சி நாட்டின் எண்ணெய் (பெட்ரோலிய பொருட்கள்) வளத்தை மட்டும் பொருளாதார பின்புலமாக கொண்டும் உடலுழைப்பு அடிப்படையிலான மனித வளத்திற்கு இந்தியா போன்ற நாடுகளையே சார்ந்திருந்தது.

உலகில் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சவுதி அரேபியா முன்னணியில் உள்ளது. ‘கருப்பு தங்கம்” என்றழைக்கப்படும் எண்ணெய் வளத்திற்காக உலகளவில் அந்நாடு அரசியல், பூகோள ரீதியில் வல்லரசு நாடுகளின் முக்கிய கூட்டாளியாக திகழ்கிறது. இந்நாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது சுற்றுப்பயணத்தின்போது கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டு இளவரசர் முகம்மதுபின் சல்மான் மேற்கொண்ட சமூக, மார்க்க (மத) அடிப்படையிலான சீர்திருத்தங்களை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார். இளவரசர் முகம்மது பின் சல்மானின் பொருளாதார மாற்றத்திற்கான பார்வை, எம்.பி.எஸ் குறிக்கோள் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

அந்நாட்டின் இந்த மாற்றங்கள் இந்தியாவுடனான பொருளாதார கூட்டாளித்துவத்திற்கு பெரிய அளவில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி மற்றும் மனித ஆற்றல் ஏற்றுமதி என்பதன் அடிப்படையில் செயல்பட்ட இந்நாடுகளின் கூட்டாளித்துவம் தற்போது பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார கூட்டாளித்துவ நிலைக்கு உயர்ந்துள்ளது கடந்த 1979 முதல் இளவரசர் முகம்மது பின்சல்மான் சவுதி அரேபியாவை சமூக மாற்றத்தில் நவீன மயமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அப்போது மன்னராட்சியில் ஆதிக்கம் செலுத்திய அடிப்படை மதவாதிகள் ஆட்சியையே சீர்குலைக்க சதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய துணைகண்டத்திற்கும், வளைகுடா நாடுகளுக்குமிடையே ஆழமான நட்புறவுகள் இருந்தாலும், பழமை, மதவாத கோட்பாடுகள் காரணமாக மத, அரசியல் மற்றும் ராஜ்ய ரீதியில் பல எதிர்மறை தாக்கங்கள் இரு நாடுகளுடனான உறவை கடுமையாக பாதித்தன. ஆனால் தற்போதைய மாற்றம் அந்த பின்னடைவுகளை சரி செய்து முன்னற்ற பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது.

சவுதி அரேபியாவின் பொருளாதார, சமூக மாற்றங்களில் இந்தியாவுக்கு பெரும்பங்கு உள்ளது. சவுதி மன்னரின் இந்த சீர்திருத்த நடக்கைக்கு பிரதமர் மோடி தனது அரசின் முழுமையான ஆதரவை உறுதி செய்தார். டாவோஸ் மாநாடு போன்று சவுதியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பிரேசில் அதிபர் ஜெய்ர் பால்கனோரா, அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகரும் அவரது மருமகனுமான ஜரேட் குஷ்னர் மற்றும் சர்வதேச முன்னணி நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். ‘வருங்கால முதலீட்டுக்கான முயற்சி” என்ற அமைப்பின் கீழ் சர்வதேச அளவில் சவுதி அரேபியாவை பொருளாதார கூட்டாளித்துவத்திற்காக கொண்டு செல்லும் முயற்சியாக இது கடந்த 2017ம் ஆண்டு உருவானது. இது சவுதி மன்னரின் 2030 தொலைநோக்கு பார்வை என்ற சவுதி நாட்டின் பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் ஒரு அம்சமாகும்.

2016ம் ஆண்டில் சவுதி மன்னர் இந்த தொலைநோக்கு திட்டத்தை அறிவித்தார். வரலாற்று ரீதியிலான எண்ணெய் வணிகத்தை மட்டுமல்லாது தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனங்களை உருவாக்கி தாராள மயமாக்கலை உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அரங்கிலும் அதை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது. ஆப்பிரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டங்களின் பூகோள ரீதியான சந்திப்பில் அமைந்துள்ள சவுதி அரேபியா, முதலீட்டுக்கான அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளது. இதன் முக்கிய நோக்கமே, சவுதி நாட்டின் இளம் தலைமுறையினருக்கும், அதன் பெருகி வரும் மக்கள் தொகைக்கும் நீடித்த நிலைத்த நன்மைகளை உருவாக்கித்தர வேண்டுமென்பதுதான்.

சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான அரெம்கோ, சர்வதேச எண்ணெய் நிறுவனமாக மாறியுள்ளது. அந்நாட்டில் அந்நிய நேரடி முதலீடு எளிமையாக்கப்பட்டுள்ளது சுற்றுலா மற்றும் கேளிக்கை தொழில்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. கடன் சந்தை மேம்பாடு திவால் சட்டம் எண்ணெய் சாரா தொழில்கள் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி, தண்ணீர் மற்றும் மின்சாரம் மீதான மானிய குறைப்பு, தேவையானவர்களுக்கு நிதியுதவி, லஞ்ச ஊழலுக்கெதிரான மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் போன்றவை பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக வங்கி அறிக்கையில் சவுதி அரேபியாவில் வணிகம் செய்வது எளிது என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உலகளவில் பருவநிலை மாற்றத்தை தடுக்கும் முதல் 10 நாடுகளில் சவுதி அரேபியாவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2030 தொலைநோக்கு திட்டத்தின் முக்கியத்துவம் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளின் கூட்டாளித்துவத்தை எதிர்நோக்கும் வகையில் அமைந்துள்ளன.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம். அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது போன்ற மோடியின் நடவடிக்கைகளை சவுதி அரசு அங்கீகரித்துள்ளது. மத சகிப்புத்தன்மையை, நமது பாரம்பரிய அன்பு என்று சவுதி மன்னர் கருத்து தெரிவித்துள்ளார். பொது இடங்களில் மதக்கோட்பாடுகளை கண்காணிக்கும் முறை கைவிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகால சினமா தடை நீக்கப்பட்டுள்ளது. பெரிய ஓட்டல்களில் விருந்து, இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தேசியவாதம் என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையான மதக்கோட்பாடு என்ற நிலைமாறி உலகளவில் சமநிலைகொண்ட நாடாக சவுதி மாறி வருகிறது. அந்நாட்டுடனான பலமான ராஜ்ய உறவுகளை பிரதமர் மோடி ஏற்கனவே முந்தைய தனது ஆட்சியில் உருவாக்கியிருந்தார். தற்போதைய அந்நாட்டின் மாற்றம் பிரதமர் மோடியின் நீடித்த பூகோள ரீதியிலான கூட்டாளித்துவத்திற்கு மேலும் வலுவூட்டியுள்ளது.

தமிழில் : த. வளவன்