ரீவைண்ட் : மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்

Mohamed Irshad

நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் முகமது இர்ஷத், சிங்கப்பூர் நாட்டின் நியமன எம்.பி-யாகப் பதவியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமர்த்தப்பட்டிருப்பது நாகை நகர மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடான சிங்கப்பூர், சாதி, இனம், மதம், மொழி கடந்து சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்நாட்டை கட்டுக்கோப்புடன் வடிவமைத்த பெருமை லீக் வான் யூவுக்கு உண்டு. அவர் இந்நாட்டுக்கு பல்லாண்டுகள் தலைமை வகித்து சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பகிறார். சிங்கப்பூரின் தாய் மொழி மலாய்யாக இருந்தபோதிலும், இணைப்பு மொழியான ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் மொழிகளும் ஆட்சி மொழிகளாக உள்ளது தனிச் சிறப்பாகும்.

சிங்கப்பூர் நாட்டின் அரசியல் அரங்கிலும் தமிழர்கள் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். முன்பு சிங்கப்பூரின் அதிபராக நாதன் என்ற தமிழர் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். தற்போது, சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஹலிமா யாகூப் பதவியேற்று பலரது பாராட்டைப் பெறும் வண்ணம் பணியாற்றி வருகிறார். அதுபோல், துணைப் பிரதமராக உள்ள தருமன் சண்முக ரெத்தினம் என்ற தமிழரும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்கிறார். சிங்கப்பூர் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக சண்முகம், வெளியுறவுத்துறை அமைச்சராக விவியன் பாலகிருஷ்ணன், கல்வி மற்றும் நிதித்துறை இரண்டாவது அமைச்சராக இந்திராணி, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக ஈஸ்வரன் ஆகிய தமிழர்களும் கோலோச்சி வருகிறார்கள்.

இந்த வகையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது இர்ஷத் சிங்கப்பூர் நாட்டின் 9 நியமன எம்.பி-க்களில் ஒருவராக அந்நாட்டு அரசு நியமித்தது. முகமது இர்ஷத்தின் தந்தை அப்பாஸ் அலி நாகையைச் சேர்ந்தவர். தாயார் ரெஜினா பேகம் நாகை அருகேயுள்ள திட்டச்சேரியைச் சேர்ந்தவர். நாகை ஹபீப் மருத்துவமனையில்தான் முகமது இர்ஷத் பிறந்தார். இவர்கள் குடும்பம் புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வசிக்கின்றனர்.

இதற்கு முன் நாகூரில் பிறந்த அப்துல் ஜப்பார் என்பவர் சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.பி-யாக வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாகைக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் முகமது இர்ஷத் என நாகை நகர மக்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்.