சிங்கப்பூர் பயணம் வெற்றி; புதுவையில் சர்வதேச விமான நிலையம் உட்பட ரூ. 3000 கோடி முதலீடுகள் !

சிங்கப்பூர் பயணத்தால் புதுவைக்கு ரூ. 3ஆயிரம் கோடி அளவுக்கு சர்வதேச முதலீடுகள் வர உள்ளதாக முதல்வர் வே. நாராயணசாமி கூறினார். இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிங்கப்பூர் தொழில்முனைவோர்கள் கூட்டமைப்பு, மலேசிய தொழில் மன்றம் ஆகியவை விடுத்த அழைப்பை ஏற்று, அரசு முறைப் பயணமாக அல்லாமல், தனிப்பட்ட பயணமாக நான், தொழில் துறை அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் இரா. சிவா எம்எல்ஏ ஆகிய மூவரும் கடந்த 6 -ஆம் தேதி சிங்கப்பூர் சென்றோம். அதிகாரிகள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை.

கடந்த 7-ஆம் தேதி சிங்கப்பூரைச் சேர்ந்த “மெய்ன்ஹார்ட்’ என்ற விமான கட்டுமான நிறுவனத்தினருடன், புதுச்சேரியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. புதுச்சேரி கரசூரில் அந்த விமான நிலையம் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. இதற்கான இடத்தை புதுவை அரசு வழங்கும். கட்டுமானத்தை தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் வகையில் முடிவு செய்யப்பட்டது.

அடுத்ததாக, சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர்கள்புதுவையில் தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். இது தொடர்பாக கூட்டமைப்பினர் புதுச்சேரிக்கு வந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

தொடர்ந்து, தமிழகம், புதுவை மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்முனைவோர், தொழிற்சாலை நிர்வாகிகளுடனான கூட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, ஒரு நிறுவனம் காரைக்கால் பிராந்தியத்தில் ரூ.1,500 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை அமைக்கவும், திருவாரூரைச் சேர்ந்த ஒரு மருத்துவ நிறுவனம் காரைக்காலில் பல்நோக்கு மருத்துவமனை கட்டவும், மற்றொரு நிறுவனம் புதுச்சேரியில் பெரிய அளவில் வணிக வளாகம் கட்டவும் முன்வந்துள்ளன. இதில், சிங்கப்பூரின் “சர்பனா சுராங்’, “மெயின்ஹார்ட்’ ஆகிய நிறுவனங்கள் புதுச்சேரியில் விமான நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்தன.

கடந்த 9 -ஆம் தேதி சர்வதேச அளவில் 10-ஆவது இடத்தில் உள்ள “நிங்யாங்’ என்ற பல்கலைக்கழகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், புதுச்சேரி மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு உதவித் தொகையுடன் உதவுவதாக அந்த பல்கலை. உறுதி அளித்துள்ளது. இதில் முக்கியமாக, சுற்றுலா வளர்ச்சிக்காக சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கன்னியாகுமரிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவுள்ளோம். இதற்காக குஜராத்தை சேர்ந்த நிறுவனத்தினர் வருகிற 20 -ஆம் தேதி புதுவை அரசிடம் பேசவுள்ளனர்.

இதன் மூலம் விமான நிலையம், சுற்றுலா வளர்ச்சித் திட்டம், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, தொழில் பூங்கா ஆகிய 4 திட்டங்களில் முதலீடு செய்ய சிங்கப்பூரில் உள்ள தொழில்முனைவோர் ஆர்வம் காட்டியுள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ. 3,000 கோடி அளவுக்கான முதலீடுகள் புதுவைக்கு கிடைக்கும் என நம்புகிறோம். இந்த முதலீடுகள் கிடைத்தால் புதுவையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.

இதற்காகத் தேவைப்பட்டால் நாங்கள் மீண்டும் சிங்கப்பூர் சென்று பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார் முதல்வர் வே. நாராயணசாமி.
பேட்டியின் போது, தொழில்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான், எம்எல்ஏக்கள் இரா. சிவா, ஏ. ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.