சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழர்களே… இதுபோன்ற வீடியோ வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை

இந்தாண்டு(2019) மே மாதம் சிங்கப்பூரில் நிகழ்த்தப்பட்ட சம்பவம் ஒன்று தமிழகத்தில் எதிரொலித்தது குறித்தும், அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளைப் பற்றியும் அலசுகிறது இந்த எச்சரிக்கை பதிவு.

சிங்கப்பூரில் பணியாற்றிய ஒரு தமிழ்ப் பெண், குறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றி கேவலமாகவும், இழிவாகவும் பேசி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் பெயர் கனிமொழி…. புரியும்படி அடையாளப்படுத்த வேண்டுமெனில், சிங்கப்பூர் கனிமொழி.

கடந்த ஏப்ரல் 16-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை பற்றி தவறாகவும், அந்த ஜாதி பெண்களின் ஒழுக்கத்தை விமர்சித்தும் பேசப்பட்டிருந்தது. இப்படி ஒரு ஆடியோவை வெளியிட்டது இன்னொரு ஜாதியை சேர்ந்தவர்கள். அதனால் சம்பந்தப்பட்ட ஜாதியினர் போராட்டத்தில் இறங்கினர். தங்களது எதிர்ப்புகளை ஆக்ரோஷமாக பதிவு செய்தனர்.

இதனை அடுத்து, போலீஸ் இந்த விஷயத்தில் தலையிட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு அந்த ஆடியோவில் பேசியவர்கள், அதற்கு உதவியாக இருந்தவர்கள் என 4 பேரை பேராவூரணியில் கைது செய்தது போலீஸ். மேலும் விசாரணையில், சிங்கப்பூரிலிருந்து அந்த ஆடியோ வெளியானது என்று தெரியவந்ததால், அது சம்பந்தமாக 4 பேரை அங்கிருந்து வரவழைத்தும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் எல்லாம் அம்புகள்தானே தவிர எய்தது யார் அதாவது மூலக்காரணம் யார் என்ற விசாரணை நீண்டு கொண்டு போனது. போலீஸாரின் தீவிர விசாரணையில், சிங்கப்பூரில் இருந்து ஜாதி ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து ஆடியோவை வெளியிட்டது ஒரு இளம்பெண் என்பதும், அவர் பெயர் கனிமொழி என்பதும் தெரிய வந்தது.

இவர் தஞ்சாவூர் அருகே திருமங்கலக்கோட்டை மாதவன் குடிகாட்டை சேர்ந்தவர் என்றும் 40 வயதான இவர், சிங்கப்பூரில் 10 வருஷமாக இருந்த வீட்டு வேலைதான் செய்து வந்திருக்கிறார். இவர்தான் தன் சாதி பெண்களை இன்னொரு சாதி மக்கள் மோசமாக பேசிவிட்டார்கள், என்றுகூறி மிகக் கேவலமாக ஆடியோவில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்சி ஏர்போர்ட் இந்த தகவல் உறுதியானதை அடுத்து போலீசார், 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்திய தூதரகத்தின் உதவியுடன் கனிமொழியை இந்தியாவிற்கு அழைத்து வந்த போலீசார், திருச்சி ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய கனிமொழியை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஓரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

சமூக ஊடகங்கள் ஆட்சி செய்யும் இந்த காலக்கட்டத்தில், நாம் வெளிநாட்டில் தானே வசிக்கிறோம், நம்மை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றோ, யாரும் நம்மை நெருங்கி விட முடியாது என்றோ நினைத்து, பேஸ்புக், வாட்ஸ் அப், டிக் டாக் போன்ற தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவை வெளியிட வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள். இதை அலட்சியப்படுத்தி நாம் செயல்படும் பட்சத்தில் அதற்கான பின் விளைவுகள் நம்மை மட்டுமல்லாது குடும்பத்தையும் சேர்த்து காலி செய்து விடும் என்பதற்கு கனிமொழி சம்பவம் நமக்கு ஒரு மிகப்பெரிய பாடமாகும்.