ஜூரோங் தீவைப் பசுமையான தொழிற்பேட்டையாக மாற்றத் திட்டம்!

Photo: Singapore Petroleum Co. Ltd.

 

சிங்கப்பூரைப் பசுமையானதாக மாற்றுவதற்கு, அரசு ‘2030 சிங்கப்பூர் பசுமை திட்டம்’ (Singapore Green Plan 2030) என்ற தொலைநோக்கு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் டீசல், பெட்ரோல் எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மின்சார வாகன உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், மின்சாரத்தில் இயங்கும் கார்கள், இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும், அதனை சார்ந்த சிறு நிறுவனங்கள், மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, ஜூராங் தீவை ஒரு நிலையான ஆற்றல் பூங்காவாக மாற்றுவதற்கான இரண்டு ஆண்டு ஆய்வு சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

ஜூரோங் தீவு வட்டப் பொருளாதாரம் (Jurong Island Circular Economy- ‘JICE’) ஆய்வு, 51 நிறுவனங்களின் ஆற்றல், நீர் மற்றும் இரசாயனக் கழிவுகள் பற்றிய தரவை பகுப்பாய்வு செய்து, கணினி மட்டத்தில் வளப் பயன்பாட்டைக் குறைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை அடையாளம் கண்டுள்ளது.

ஜேடிசி (Jurong Town Corporation-‘JTC’) மேலும் பல நிறுவனங்களின் யோசனைகளைத் திரட்டுவதோடு, தீவில் தங்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கி சோதித்துப் பார்க்கும் தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் நிலைத்தன்மை தீர்வுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஜெர்மனி, புரூணையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…!

ஜூரோங் தீவு வட்ட பொருளாதாரத்தின் ஆய்வு நிறைவையொட்டி நேற்று (19/08/2021) காணொளி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மனிதவள அமைச்சரும், வர்த்தக மற்றும் தொழில்துறை இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங் (Manpower Minister and Second Minister for Trade and Industry Tan See Leng), “ஜுரோங் தீவு சிங்கப்பூர் அதன் காலநிலை உறுதிப்பாட்டை அடைவதற்கான மையப்புள்ளியாக உள்ளது. இது உலகின் முன்னணி எரிசக்தி மற்றும் இரசாயன மையங்களில் ஒன்றாகும், மேலும் 100- க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆண்டைப் போலவே, ஜூரோங் தீவு சுமார் 8.1 மெகாவாட்- சூரிய ஒளி ஆற்றல் மின்சாரத்தை உற்பத்திச் செய்துள்ளது. எங்கள் தொழில்கள் கார்பன் மற்றும் எரிசக்தி செயல்திறனில் மாற்றங்களை அடைய வேண்டும் மற்றும் வட்ட பொருளாதார அணுகுமுறையை எடுப்பது அர்த்தமுள்ள வித்தியாசத்தை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.

எரிசக்தி மற்றும் இரசாயனத் தொழிலுக்கான ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக, ஜூரோங் தீவில் உள்ள பல நிறுவனங்கள் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சேமிப்பு வசதிகள் போன்ற உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன.

கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆய்வு, இந்த நிறுவனங்களிடையே வளங்களைப் பயன்படுத்துதல், பகிர்வு மற்றும் மறுபயன்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய முயன்றது. இது ஜூராங் தீவை ஒரு நிலையான ஆற்றல் மற்றும் ரசாயனப் பூங்காவாக மாற்றுவதற்கான ஒத்துழைப்புக்கான பல சவால்களையும் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.

ஆய்வின் மற்றொரு விளைவு, ஜூரோங் தீவில் உள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (Natural Gas- ‘LNG’) முனையத்திலிருந்து குளிர்ந்த ஆற்றலை திறம்பட பயன்படுத்த ஏற்கனவே ஒரு திட்டம் உள்ளது.

இந்தோனேஷியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூர்!

இயற்கை எரிவாயு திரவப் பிரித்தெடுக்கும் வசதி என அழைக்கப்படும் இந்த திட்டம் சிங்கப்பூர் எல்என்ஜி கார்ப் (LNG Corp) மற்றும் கெப்பல் உள்கட்டமைப்பு (Keppel Infrastructure) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பாகும். வெற்றிகரமாக இருந்தால், நிறுவனங்கள் தங்கள் சுத்தமான ஆற்றல் கலவையை அதிகரிக்கவும், கார்பன் தடம் குறைக்கவும் இதை நடைமுறைப்படுத்தலாம் என்று ஜேடிசி தெரிவித்துள்ளது.

அதற்கு ஏற்ப இரண்டு புத்தாக்கமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றில் பங்கேற்க அக்டோபர் வரை அவகாசம் உள்ளது. மற்றொன்றின்கீழ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகளைப் பரிந்துரைக்க இரண்டு மாதங்களில் அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு நடவடிக்கைள் காரணமாக ஜூரோங் தீவு விரைவில் பசுமையான தொழிற்பேட்டையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த தொழிற்சாலைகள் அதிகளவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.