ஜெர்மனி, புரூணையில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…!

Photo: Changi Airport

 

சிங்கப்பூரில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள், தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது சுகாதாரத்துறை அமைச்சகம்.

அதே சமயம், பொதுமக்கள் மற்றும் உணவகங்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூர்!

இந்த நிலையில், சர்வதேச விமான போக்குவரத்துக்கும் அரசு படிப்படியாக அனுமதி அளித்து வருகிறது. அந்த வகையில், புரூணை (Brunei), ஜெர்மனி (Germany) ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளில் முழுமையாக கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. இந்த நடைமுறை வரும் செப்டம்பர் மாதம் 8- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான பயண முறைத் திட்டத்தின் (Vaccinated Travel Lane – VTL) ஒரு பகுதியாக, இது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணிகள் சிங்கப்பூரில் இருக்கும்போது பலமுறை கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதன்படி, பயணத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். சாங்கி விமான நிலையத்துக்கு வந்ததும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 3. சிங்கப்பூருக்கு வந்த 3, 7 நாள்களுக்குப் பின் குறிப்பிடப்பட்ட மருந்தகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இருப்பினும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இதுவரை தடுப்பூசி போட முடியாதவர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயணம் செய்ய முடியாது.

5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து (காணொளி)

ஆனால் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் அவர்கள், அனுமதிக்கப்பட்ட நாடுகளில் 21 நாள்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இப்பயண முறையின் கீழ் சிங்கப்பூருக்கு வர விரும்புவோர், செப்டம்பர் 1- ஆம் தேதியிலிருந்து முன்பதிவு செய்யலாம்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள், நிரந்தரவாசிகள் சிங்கப்பூருக்கு வர, முன்பதிவு செய்யத் தேவையில்லை. சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன், அவர்களது ‘ஹெல்த் ஹப்’ செயலி மூலம் தடுப்பூசி விவரங்களைக் காண்பித்தால் அனுமதிக்கப்படுவர்.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர பயன்பாட்டுப் பட்டியலில் உள்ள தடுப்பூசிகளில், ஃபைசர்-பயோஎன்டெக்/கொமர்னாட்டி, மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca), சினோவாக்-கரோனாவாக் மற்றும் சினோஃபார்ம் (Sinopharm) ஆகியவை அடங்கும்.

அமைச்சகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் (Singapore Airlines Group) வாரத்திற்கு ஐந்து விமானங்களை ஜெர்மனிக்கு இயக்க உள்ளதாகஅறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் அறிவிப்பால், ஜெர்மனி, புரூணை நாட்டு சுற்றுலா பயணிகள், தொழிலதிபர்கள், சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஹாங்காங் (Hong Kong) அல்லது மக்காவோவிலிருந்து (Macao) வரும் பயணிகள் ஆகஸ்ட் 26- ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் நுழைய ஏர் டிராவல் பாஸுக்கு (Air Travel Pass) விண்ணப்பிக்கலாம். அவர்கள் வந்தவுடன் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.