மின்சாரத்தில் இயங்கும் கார் டாக்சிகளை அறிமுகப்படுத்தும் ‘SMRT’ நிறுவனம்!

Photo: SMRT Official Facebook Page

சிங்கப்பூரை காற்று மாசு இல்லாத பசுமையான சுற்றுச்சூழலைக் கொண்டதாக மாற்ற, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காற்று மாசு அதிகரிப்பதற்கு காரணமாக உள்ள பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றில் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, மின்சார வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், அதனை சார்ந்த நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு நிறுவனங்களை அரசு ஊக்குவித்து வருகிறது.

அதேசமயம், மினசார வாகனங்களை வாங்குவோருக்கும் வரிச்சலுகை, மானியம் உள்ளிட்டவை அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், பெட்ரோல், டீசல்,இயற்கை எரிவாயு ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் விலையை விட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விலை அதிகமாகவே உள்ளது. எனினும், குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை விற்பனை செய்ய, மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

“வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும்”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

இதனிடையே, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் சிங்கப்பூரின் அனைத்து பகுதிகளிலும் அமைத்து வருகிறது ‘Sembcorp’ உள்ளிட்ட நிறுவனங்கள். குறிப்பாக, ‘Sembcorp’ நிறுவனமானது மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களில் ‘சோலார் பேனல்’ அமைத்து, அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை சார்ஜிங் மூலம் வாகனங்களுக்கு சார்ஜிங் செய்து வருகிறது. இந்த முறை மூலம் மாசுபடுக்கு வாய்ப்பே இல்லை என்பதை அந்நிறுவனம் நிரூபித்துள்ளது.

அதேபோல், கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் மின்சார கார்களை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிங்கப்பூரில் மூன்றாவது பெரிய போக்குவரத்து சேவையை வழங்கி நிறுவனமான ‘SMRT’ நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் கார் டாக்சிகளை அறிமுகப்படுத்த உள்ளது. சீனாவின் யூரோகார்ஸ் நிறுவனத்துடன் ‘SMRT’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட சுமார் 30 மில்லியன் டாலராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 300 எம்ஜி 5 ரக கார் டாக்சிகளை அந்நிறுவனம் வாங்கவிருக்கிறது. இந்த டாக்சிகள் இம்மாத பிற்பகுதியில் இருந்து படிப்படியாக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் மரினா பேயில் தேசிய தின சடங்குபூர்வ அணிவகுப்பு.! (காணொளி)

எம்ஜி 5 ரக டாக்சி ஒருமுறை சார்ஜிங் செய்தால் சுமார் 400 கி.மீ. வரை பயணிக்கலாம். மேலும், 40 நிமிடங்களில் 80% சார்ஜிங்கை செய்து விடலாம். ‘SMRT’ நிறுவனத்திடம் தற்போது உள்ள கார் டாக்சிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 1,780 ஆகும்.

வரும் 2026- ஆம் ஆண்டிற்குள் அனைத்து கார் டாக்சிகளையும் மின்சாரத்தில் இயங்கும் டாக்சிகளாக மாற்ற ‘SMRT’ நிறுவனம் இலக்கு கொண்டிருக்கிறது.

அதேபோல், சிங்கப்பூரில் 2025- ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கும் கார்களையும், டாக்சிகளையும் பதிவு செய்ய முடியாது. அதைத் தொடர்ந்து, 2040- ஆம் ஆண்டு எரிபொருள்களில் இயங்கும் கார்களுக்கும், டாக்சிகளுக்கும் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.