“வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும்”- அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

Photo: pmo.gov.sg

 

தேசிய தினத்தையொட்டி பிரதமரின் தேசிய தின உரை நேற்று (08/08/2021) மாலை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒளிபரப்பானது. அதைத் தொடர்ந்து, பிரதமரின் உரையை மலாய், தமிழ், சைனீஸ் ஆகிய மொழிகளில் அமைச்சர்கள் மொழிபெயர்த்து பேசினர்.

அந்த வகையில் பிரதமரின் உரையை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தமிழில் மொழிபெயர்த்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “என் சக சிங்கப்பூரர்களே, வணக்கம். நான் பூமலையில் உள்ள Symphony ஏரியில் இருக்கிறேன். சிங்கப்பூரர்கள் பலருக்குப் பிடித்த இடம். முன்னர் இருந்த பரபரப்பு இப்போது இல்லை. ஆனால் இது இன்னும் பிரபலமாகவே உள்ளது.

மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் ஜூரோங் மீன் வர்த்தகத் துறைமுகம்.!

கோவிட்-19க்கு எதிரான நமது போராட்டம் மேடுபள்ளங்கள் நிறைந்த ஒன்று. கோவிட்-19 பயங்கரமான ஓர் எதிரி. அதனால் உலகளவில் மில்லியன்கணக்கானோர் மாண்டனர்; அதிகமானோர் நோய்வாய்ப்பட்டனர்; எண்ணற்ற வேலைகளும் தொழில்களும் பாதிப்படைந்தன. சிங்கப்பூரில் அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக நாம் எண்ணும் ஒவ்வொரு முறையும் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கின்றன.

மிக அண்மையில் ஜூரோங் மீன்வளத் துறைமுகத்தில் கிருமித்தொற்றுக் குழுமம் பெரிய அளவில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து பல ஈரச் சந்தைகளுக்குப் பரவியது. அதனை மெதுவடையச் செய்ய நாம் கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரித்தோம்.

எவ்வளவோ கவனமாக இருந்தும் சாண் ஏறினால் முழம் சறுக்குவது போல் ஆனதில் பல சிங்கப்பூரர்களுக்கு ஏமாற்றம். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எப்போதுமே நமது இலக்கு உங்களையும் உங்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதுதான். பொதுச் சுகாதார நடவடிக்கைகள், சமுதாயக் கட்டொழுங்கு, நிதி ஆதரவு ஆகிய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

சிங்கப்பூருக்கு புதுப் பெயர்.. தலையசைத்த அதிகாரிகள்.. நிபந்தனை விதித்த ஜப்பான்! | சிங்கப்பூர் சிலிர்த்தெழுந்த வரலாறு

அடிப்படையில் சிங்கப்பூரிலுள்ள அனைவரையும் பாதுகாக்கத் தொடர்ந்து பாடுபடுகிறோம். இதுவரை மூன்றில் இரண்டு பகுதிக்கும் அதிகமான மக்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நமது மூத்தோரில் 85 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறு நம் மக்கள் பாதுகாக்கப்படுவதால் நாம் வலுவான நிலையில் இருக்கிறோம். அதனால் நமது பொருளியல் மீண்டும் வளர்ச்சியடையும்; இயல்புநிலை விரைவில் திரும்பும்.

கோவிட்-19-க்கு எதிரான போராட்டம் நம் எல்லோரையும் பாதித்துள்ளது. இந்த நேரத்தில் நாம் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ள வேண்டும். நமது நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரிடையே சோர்வு, மன உளைச்சல், வேதனை போன்றவை இருந்தால் கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால் உதவி நாட வேண்டும். கோவிட் -19 சில சிரமமான விவகாரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

மூன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்:
குறைந்த வருமான ஊழியர்கள் முதலில் குறைந்த வருமான ஊழியர்களுக்கு நாம் ஆதரவளிக்கவேண்டும். கோவிட்-19 அவர்களை அதிகமாகப் பாதித்துள்ளது. அனைத்து சிங்கப்பூரர்களையும் போலவே குறைந்த வருமான ஊழியர்களும் நல்ல, கட்டுப்படியான சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு, கல்வி ஆகியவற்றைப் பெறுகின்றனர். எனினும், அவர்களுக்கு சேமிப்பு அதிகம் இருக்காது. கோவிட்-19 நிலவரத்தால் ஏற்பட்ட சம்பளக் குறைப்பையும் எதிர்பாரா வேலையிழப்பையும் சமாளிக்கக் கஷ்டப்பட்டனர். அதனால் அவர்களுக்கு நாங்கள் கூடுதல் உதவி வழங்கியுள்ளோம்.

திறன்சார்ந்த பொருளியலில் நமது குறைந்த வருமான ஊழியர்களுக்கு மேலும் ஆதரவு தேவைப்படும். அதற்காகப் பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை வேலைநலன், படிப்படியான சம்பள உயர்வு போன்ற திட்டங்களுக்குத் துணையாக இருக்கும். குறைந்த வருமான ஊழியர்களின் சம்பளம் உயரும்; திறன் மேம்படும்; அவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகும்.

குறைந்த வருமான ஊழியர்களின் உண்மையான முன்னேற்றம் நமக்கு மிகவும் முக்கியம். வாழ்க்கையின் எந்த நிலையில் நீங்கள் தொடங்கினாலும், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் முன்னேறுவதை நாங்கள் உறுதிசெய்வோம்.

இந்த 8 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தனிமை உத்தரவை அவர்கள் வசிக்கும் இடங்களில் நிறைவேற்றலாம்!

இரண்டாவதாக, இங்குப் பணிபுரியும் வெளிநாட்டவர் குறித்து சிங்கப்பூரர்களின் கவலையை நாம் கவனிக்கவேண்டும். அந்தக் கவலை எங்களுக்குப் புரிகிறது. சம்பளம், பதவி உயர்வு போன்றவற்றில் போட்டி இருக்கும். சமூகத்திலும் சில கருத்துவேறுபாடுகள் நிலவும்.

கோவிட்-19 ஏற்படுத்திய நிச்சயமற்ற சூழலால் வேலைகள் கிடைக்குமா என்ற கவலையும் சமுதாயப் பூசல்களும் மோசமாகியுள்ளன.

இவற்றை அரசாங்கம் முழுமையாகப் புரிந்துகொண்டு கவனித்து வருகின்றது. வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நம் கொள்கைகளை மாற்றியமைப்பது ஒரு வழி. ஆனால் வெளிநாட்டு ஊழியர்களையும், புதிய குடியேறிகளையும், நாம் வரவேற்காமல் இருக்கக் கூடாது. அது நம் அடிப்படை நலனுக்குப் புறம்பானது. நாம் தொடர்ந்து உலகளாவிய, வட்டார நடுவமாகத் திகழ்ந்து நம் மக்களுக்கு வேலைகளையும் வாய்ப்புகளையும் பெற்றுத் தர வேண்டும்.

மூன்றாவதாக, நாம் இன, சமய விவகாரங்களைக் கவனமாகக் கையாள வேண்டும். நல்லிணக்கம் மிகுந்த, பல இன சமுதாயம் என்பதில் நாம் பெருமிதம் கொண்டுள்ளோம். ஆனால் அதனைக் கட்டிக்காப்பது சுலபமல்ல. நமது சமூகச் சிந்தனையை அயல்நாட்டு நிகழ்வுகள் பாதிக்கின்றன. ஏனெனில் நாம் உலக நாடுகளுடன் வெளிப்படையான, நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளோம்.

அண்மையில் சில இனரீதியான சம்பவங்கள் சமூக ஊடகத்தில் விரிவாகப் பேசப்பட்டன. இவை கவலைக்குரியவை; ஆனால் வழக்கமானவை அல்ல. ஒவ்வொரு நாளும் இனங்களுக்கிடையில் பல மகிழ்ச்சியான பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஒருசில விரும்பத்தகாத சம்பவங்களால் நமது அணுகுமுறை தோல்வியடைந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது.
அதேவேளையில் உணர்ச்சிவசப்படவைக்கும் இன, சமய விவகாரங்களைக் கவனமாகக் கையாள வேண்டும். இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் கருத்துப்பரிமாற்றம் இருப்பது நல்லது.

நமது பல இனச் சமுதாயத்தை ஒன்றிணைக்க நமது முன்னோர் அயராமல் முயன்றனர். ஒவ்வொரு தரப்பும் விடாப்பிடியாகத் தனது அடையாளத்தையும், உரிமைகளையும் முன்னிறுத்தியதால் இந்த ஒற்றுமை ஏற்படவில்லை. மாறாக, அனைத்துத் தரப்பும் கொண்டிருந்த புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, அவற்றால்தான் நமது நல்லிணக்கம் சாத்தியமானது.

அரும்பாடுபட்டுப் பெற்ற இதனை எளிதில் விட்டுவிடக்கூடாது. நமது சமூகம் மாற்றங்காணும்போது நாம் தொடர்ந்து நமது நல்லிணக்கத்தை வலுவாக வைத்திருக்க வேண்டும். இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளைக் கடந்து அனைத்து சிங்கப்பூரர்களின் சார்பாக அரசாங்கம் இந்த விவகாரங்களைக் கையாளும். அதற்கு உங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும், நம்பிக்கையும் மிக அவசியம்.

தெம்பனிஸ் காபி ஷாப்பில் தீடீரென தீ விபத்து!

இந்தப் பிரச்சினைகள் சிங்கப்பூருக்கு மட்டுமே உரியவை அல்ல. உலகில் பல நாடுகள் இவற்றைவிட மோசமான பிரச்சினைகளுடன் போராடுகின்றன. நமக்கும் கூட, இவை முற்றிலும் புதிய பிரச்சினைகள் அல்ல. சிங்கப்பூர் தன்னாட்சி பெற்றபோது பல இனத்தவரும் வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர்; வெவ்வேறு பள்ளிகளில், வெவ்வேறு மொழிகளில் பயின்றனர்; வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் ஒருவர் மற்றொருவர் கலாசாரத்தைப் புரிந்து கொள்ள மக்கள் செயல் கட்சி அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றுள் ஒன்று, அந்நாளில் அரங்கேறிய ‘Aneka Ragam Rakyat’ போன்ற கதம்பக் கலை நிகழ்ச்சித் தொடர். அதன் முதல் நிகழ்ச்சி இதே பூமலையில் நடைபெற்றது.

இப்போது நாம் நெடுந்தூரம் கடந்து வந்துள்ளோம். வருங்காலத்தில் நமக்குப் புதிய சவால்கள் நிச்சயமாக இருக்கும். அவை அவ்வப்போது நமது தேசத்தின் உறுதிப்பாட்டையும் ஒற்றுமையையும் சோதிக்கும். நாம் மனவுறுதியோடு ஒன்றுசேர்ந்து அவற்றை எதிர்கொண்டால், மேலும் நல்லிணக்கம் மிகுந்த சமுதாயம், வளப்பம் மிகுந்த பொருளாதாரம், வெற்றிகரமான தேசம், இவற்றைச் சிங்கப்பூரால் தொடர்ந்து உருவாக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

இந்த ஆண்டின் தேசிய தினக் கருப்பாடலில் வருவது போல “நாம் இதற்கு முன்னர் சாதித்தோம்; மீண்டும் சாதிப்போம்!”

அனைவருக்கும் இனிய தேசிய தின நல்வாழ்த்துகள்!”. இவ்வாறு அமைச்சர் கூறினார்.