சிங்கப்பூரின் மூத்த அரசாங்க வழக்கறிஞர் ஜி. கண்ணன் திடீரென உயிரிழப்பு – வெளியான காரணம்!

சிங்கப்பூரின் மூத்த அரசாங்க வழக்கறிஞரான ஜி. கண்ணன் திடீரென உயிரிழந்தார். அவருக்கு 52 வயதாகிறது. கண்ணனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

தாய்லாந்தின் புக்கெட் தீவில், தனது குடும்பத்துடன் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தபோது கண்ணனின் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை அரசாங்க வழக்கறிஞரான கண்ணன், மூத்த அரசு வழக்கறிஞராகவும், அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகத்தின் குற்றவியல் வழக்கு பிரிவின் மூத்த இயக்குநராகவும் பொறுப்பு வகித்தார்.

2018ஆம் ஆண்டு தேசிய தின விருதுகளில் வழங்கப்பட்ட நீண்டகாலச் சேவை விருது கண்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மிக சிக்கலான பல முக்கிய வழக்குகளில் வாதாடிய அனுபவம் கொண்டவர்.  குறிப்பாக, வீட்டிலிருந்து பாட்டில் தூக்கியெறியப்பட்டு முதியவர் கொல்லப்பட்ட சம்பவம், ‘தி ரியல் சிங்கப்பூர்’ இணையத்தளத்தின் ஆசிரியர்களுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் அரசாங்க தரப்பு வழக்கறிஞராக பணியாற்றினார்.

கண்ணனின் மறைவு சிங்கப்பூரின் சட்ட துறைக்குப் பெரிய இழப்பு என்று அரசு  வழக்கறிஞர்கள் கூறினர். பலரும் அவரை உயர்வாக கருதியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.